பா.ஜ. மிரட்டலுக்கு பணிந்து வேட்பாளரை வாபஸ் பெறுகிறார் ஓபிஎஸ்: எடப்பாடி அணி வேட்பாளருக்கு ஆதரவு

சென்னை: பாஜவின் மிரட்டலுக்கு பயந்து, வேட்பாளரை வாபஸ்பெற முடிவு செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய இக்கட்டில் அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவரது நிலை கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுக தனக்குத்தான் சொந்தம் என்று எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் மோதி வருகின்றன. பன்னீர்செல்வத்தின் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி, அவரை கட்சியில் இருந்து நீக்கினார். அதேநேரத்தில் இந்த பொதுக்குழு செல்லாது என்று கூறி, எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கினார். இரு அணியினரும் பலரையும் கட்சியில் இருந்து நீக்கி வந்தனர்.

பின்னர் இருவரும் அதிமுகவுக்கு உரிமை கொண்டாடி நீதிமன்றம் சென்றனர். சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சில் எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் பொதுக்குழு மூலம் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும் என்ற நிலை உருவானது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நிலை இருந்தது. இந்தநிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதேநேரத்தில், அமமுக, நாம் தமிழர் கட்சிகளும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில், இடைத் தேர்தலில் பாஜ போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜவோ, வாசன் அணியை போட்டியிட வலியுறுத்தியது. அவர்கள் மறுக்கவே, எடப்பாடி அணி போட்டியிடுவதாக அறிவித்தனர். உடனே, ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிடுவதாக அறிவித்தனர். இரு அணியினரும், கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு நின்றனர். இதனால் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற குழப்பத்தில் கூட்டணி கட்சியினர் தவித்தனர். இந்தநிலையில் திடீர் திருப்பமாக இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அணி திடீரென முறையீடு செய்தது.

இந்த வழக்கில் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். அந்த வேட்பாளரை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், தேர்தல் ஆணையத்தில் தெரிவிப்பார். தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை வழங்கும் என்று தீர்ப்பளித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி அணியினர், பொதுக்குழுவை உடனடியாக கூட்ட நாள் இல்லாததால், மாவட்டச் செயலாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் தாங்கள் ஏற்கனவே அறிவித்த தென்னரசுவுக்கு ஆதரவு என்று கடிதம் பெற்று வருகின்றனர். இந்தநிலையில், தங்களது அணி வேட்பாளரை நிறுத்துவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன் இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அரசியல் ஆலோசகர்  பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர்,  கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து, பிரச்சார பணிகளை தொடங்கிவிட்டார். இதனால் என்ன செய்வது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பன்னீர்செல்வம் அணியும், பொதுக்குழு உறுப்பினர்களை புதிதாக நியமித்துள்ளது. இதனால் தாங்களிடம் உள்ளதுதான் உண்மையான பொதுக்குழு என்று கூறி தனது வேட்பாளருக்கு ஆதரவாக கடிதம் பெற்று, அவைத் தலைவரிடம் வழங்கலாமா என்றும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு செய்தால், எடப்பாடி அணியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை விட, பன்னீர்செல்வம் அணியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இதனால் இருவரும் தங்கள் அணியின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று மீண்டும் மோத ஆரம்பிக்கலாம். அதில், தமிழ்மகன் உசேன், எடப்பாடிக்குத்தான் ஆதரவாக இருப்பார். இதனால் மீண்டும் நீதிமன்றம் செல்லலாம் என்றும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், பாஜ தரப்பில் கடந்த சில நாட்களாகவே, பன்னீர்செல்வம் தரப்பிடம் பேசிய தலைவர்களும், அண்ணாமலையும், நாங்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். நீங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்குங்கள். இரட்டை இலையில் எடப்பாடி அணி நிற்கட்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு பன்னீர்செல்வம், என்னை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தால், நான் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறேன்.

யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தட்டும் என்று கூறியுள்ளார். இதை எடப்பாடி பழனிச்சாமியிடம், பாஜ தலைவர்கள் கூறியபோது, பன்னீர்செல்வத்தை ஏற்கவே முடியாது. இரட்டை இலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் போட்டி உறுதி. நீங்கள் ஆதரவு தந்தாலும், தராவிட்டாலும் போட்டிதான் என்று கூறிவிட்டார். இதனால் மக்களவை தேர்தலில் எடப்பாடியின் ஆதரவு தேவை என்று கருதிய பாஜ, உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகத்தான் உள்ளது. அதனால் வேட்பாளரை வாபஸ் வாங்குங்கள் என்று மீண்டும் பன்னீர்செல்வத்திடம் அண்ணாமலையும், பாஜ தலைவர்களும் கூறியுள்ளனர். நாங்கள் அவர்களைத்தான் ஆதரிக்கப்போகிறோம். நீங்கள் வாபஸ்பெறாவிட்டால், உங்களுக்கு மறைமுகமாக நெருக்கடி உருவாகும். அதனால் வாபஸ் வாங்குவதே சிறந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நீங்கள் எந்த முடிவையும் எடுங்கள் என்று மறைமுகமாக மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர். இதனால் வேறு வழி இல்லாமல், வேட்பாளரை வாபஸ் வாங்க கூட்டத்தில் முடிவு செய்தனர்.  பின்னர் தான் அறிவித்தால் நன்றாக இருக்காது என்று கருதி, உடனடியாக மதுரைக்கு விமானத்தில் சென்று விட்டார் ஓபிஎஸ். பின்னர் தனது வீட்டில் வைத்து வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெ.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டவர்களை மட்டும் பேட்டி அளிக்க கூறினார். பின்னர் தன் சார்பில் ஒரு குழப்பமான அறிக்கையையும் பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கோரிக்கைகளை மக்கள் முன் நாங்கள் எடுத்து சொன்னோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதற்கு கையெழுத்திட தயார் என்றும் அறிவித்தேன். அதற்கேற்ப உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று கூறி இருந்தேன். அதேபோல, இன்று இரட்டை இலை சின்னத்தின் மூலம் அதிமுக போட்டியிடுகிற வாய்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொது வேட்பாளரை நிறுத்த நான் கையெழுத்திட தயார் என்று அறிவித்தேன். என்னை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டும் அல்ல, கட்சியிலேயே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பகை உணர்வோடு கூறி வந்தனர்.

இந்நிலையில் என்னையும், என்னை சார்ந்தவர்களையும் உள்ளடக்கி எங்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர்தான், பொது வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்கிற என்னுடைய பொறுப்பு நீடிப்பதற்கு எவ்வித தடையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் விதிக்கவில்லை. அதே நேரத்தில் சச்சரவுக்கு உள்ளான பொதுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் நியமிக்கப்பட்ட முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வகிக்கின்ற பொறுப்பை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை.

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை எம்ஜிஆரின் வெற்றி சின்னமாம் இரட்டை இலை, ஜெயலலிதாவால் கட்டிக்காத்த இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது பற்றுக்கொண்ட அதிமுக தொண்டர்களும், என்மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதன்மூலம் எடப்பாடி அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது பன்னீர்செல்வம் அணிக்கு பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Related Stories: