குழந்தையை கட்டைப்பையில் வீசிச்சென்ற பெண்கள் அடையாளம் தெரிந்தது

அன்னூர்: அன்னூர் அருகே பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தையை கட்டை பையில் வீசிச்சென்ற பெண்கள் குறித்து சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் தெரிந்தது. கோவை, அன்னூர் அருகே உள்ள சாணாம்பாளையம், கட்டபொம்மன் நகரில் பிறந்த இரண்டு நாளே ஆன குழந்தை கடந்த 30ம் தேதி மீட்கப்பட்டது. அந்த குழந்தை கட்டை பையில் போட்டு வீசப்பட்டிருந்தது. அந்த பகுதிக்கு வந்தவர் சென்று பார்த்து அந்த குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குழந்தையை வீசிச்சென்றது யார்? சமீபத்தில் அந்த பகுதியில் யாருக்காவது குழந்தை பிறந்ததா? அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாருக்காவது குழந்தை பிறந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிலையில் ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் கடந்த 30ம் தேதி அதிகாலை 12 மணிக்கு குழந்தையை எடுத்துக்கொண்டு 2 பெண்கள் வருவதும், 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் திரும்புவதும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் 2 பெண்கள் குறித்த தகவல்களையும் திரட்டி வருகின்றனர். அவர்களது அடையாளம் தெரிந்துள்ளதால் அதை வைத்து அந்த பெண்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிக்கும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: