திருமங்கலம், எழுமலையில் மரக்கடை நிறுவனத்தில் ரெய்டு: வருமானவரித்துறை அதிரடி

திருமங்கலம்: திருமங்கலம், எழுமலையில் செயல்படும் தனியார் மரக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எழுமலையை தலைமையிடமாக கொண்டு பிரபல தனியார் மரக்கடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு திருமங்கலம், நாகமலை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. எழுமலையில் இவர்களுக்கு சொந்தமான ஜவுளிக்கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த மரக்கடை நிறுவனத்தில் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பர்மா, கொலம்பியா, நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தேக்கு, வேங்கை உள்பட பல்வேறு உயர்ரக மரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான மரக்கடைகளில் வரி ஏய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து நேற்று இந்த நிறுவனத்திற்கு சொந்தமான எழுமலையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிளைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருமங்கலத்தில் சோழவந்தான் ரோட்டில் வாகைகுளம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் மரக்கடையில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென நுழைந்த வருமானவரி துறையினர் சுமார் 10 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இதேபோல் எழுமலையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதன்படி வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும் மரங்களுக்கு முறையான கணக்குகள் காட்டப்படுகிறதா? நிறுவனத்திற்கு வரக்கூடிய வருமானத்திற்கு முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா என அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.

சோதனை நடைபெற்ற இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதே போல் திருமங்கலம் கட்ராம்பட்டியில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளையிலும் சோதனை நடைபெற்றது. மரக்கடைகளில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் திடீர் சோதனை எழுமலை மற்றும் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: