ராமேஸ்வரம் கோயிலில் நாளை தெப்ப உற்சவம்: பகல் முழுவதும் நடையடைப்பு

ராமேஸ்வரம்: தைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் நாளை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை பகல் நேரத்தில் கோயில் நடை அடைக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி-அம்பாள் தெப்ப உற்சவம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதசுவாமி கோயிலின் உப கோயிலான லட்சுமணேஷ்வரர் கோயில் தீர்த்தக்குளத்தில் இன்று மாலை 6 மணிக்கு மேல் பிள்ளையார் தெப்பம் சுற்றுதல் நடைபெறுகிறது.

நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து 5 மணி முதல் 5.30 மணிவரை  ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். பின் சுவாமி-அம்பாள் சன்னதிகளில் வழக்கமான கால பூஜைகள் நடைபெறும். பகல் 10 மணிக்கு ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் லட்சுமணேஷ்வரர் கோயிலுக்கு எழுந்தருளல் நடைபெறும். சுவாமி புறப்பாடானவுடன் கோயில் நடை சாத்தப்படும். லட்சுமணேஸ்வரர் கோயிலில் நாளை மதியம் 1.30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனை முடிந்து 6 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தெப்ப உற்சவம் நடைபெறும். தெப்பம் முடிந்து இரவு 10 மணிக்குள் பஞ்ச மூர்த்திகள் கோயிலை வந்தடைந்ததும் மீண்டும் கோயில் நடை திறக்கப்படும். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு நாளை பகல் 10 மணிக்கு லெட்சுமணேஷ்வரர் கோயிலுக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடானவுடன் ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும். அன்று பகல் முழுவதும் கோயில் நடை அடைக்கப்படும் என்பதால் கோயிலுக்குள் பக்தர்கள் தீர்த்தமாடுதலுக்கும் அனுமதியில்லை.

Related Stories: