அதிவேகமாக ஓட்டிச்சென்றதால் அரசு பேருந்து டிரைவருடன் பொது மக்கள் வாக்குவாதம்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே இன்று காலை 11.30 மணி அளவில் அரசு பஸ் ஒன்று படுவேகமாக சென்றதை பார்த்து மக்கள் மிகுந்த பதற்றம் அடைந்தனர். சிலர் இதுபற்றி டிரைவரிடம் கேட்டதற்கு அப்படித்தான் செய்வோம் என்று  பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அரசு பேருந்து டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டனர்.

இதன்பின்னர் அரசு பஸ் டிரைவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதன்பிறகு வாகனங்கள் சென்றன. இதுகுறித்து வியாபாரிகளும் பொதுமக்களும் கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தினமும் காலை, இரவு நேரங்களில் அரசு பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அதிக அளவில் கூட்டம் கூடும் பகுதிகளில் அரசு பேருந்துகளை மெதுவாக இயக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தவேண்டும்’ என்றனர்.

Related Stories: