இன்று மாலை தைப்பூச தேரோட்டம் விழாக்கோலம் பூண்டது பழநி

பழநி: பழநி மலைக்கோயில் தைப்பூச திருவிழாவில் இன்று மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த ஜன. 29ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி தினமும் காலையில் தந்த பல்லக்கிலும், இரவில் ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு இரவு 7.30 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலில் நடந்தது. வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்தனர்.

தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. பழநி நகரில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. எனினும் தைப்பூசத்தையொட்டி காலை முதலே பழநியில் பக்தர்கள் குவிய துவங்கினர். அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வந்தனர். காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது.

வின்ச், ரோப்கார் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர். பழநியில் நேற்று ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் திரும்பிய பக்கமெல்லாம் அரோகரா கோஷம் ஒலிக்கிறது.

பஞ்சாமிர்தம் தயாரிக்க 30 டன் வாழைப்பழங்கள்

பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்களில் சிலர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாங்களாகவே பஞ்சாமிர்தம் தயாரித்து, சாமிக்கு அபிஷேகம் செய்து விட்டு, தங்களுக்குள்ளாகவே பகிர்ந்து கொள்வர். இப்பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படும் முக்கிய பொருட்களில் ஒன்று மலை வாழைப்பழம். இதற்காக பழநி நகரில் ஏராளமான தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டு, சுமார் 30 டன் மலை வாழைப்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் குடகு, வடகவுஞ்சி, வத்தலக்குண்டு, பன்றிமலை, ஆடலூர் உள்ளிட்ட பகுதிளில் இருந்து மலை வாழைப்பழங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Related Stories: