திருப்போரூர் அருகே விளையாட்டு பல்கலை விடுதி மாணவிகள் ஆர்ப்பாட்டம்: தரமான உணவு வழங்க வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே இன்று காலை விளையாட்டு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவிகள், தங்களுக்கு தரமான உணவு உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பல்கலைக்கழக அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. திருப்போரூர் அருகே கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் உள்ள மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

இங்கு சுமார் 2600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் 1600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் தங்கி படிக்கும் வகையில் தனித்தனி விடுதி வசதியும் உள்ளது. இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் மாணவியர் விடுதியில் தங்கியிருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உணவகத்தில் தங்களுக்கு தரமற்ற உணவு பொருட்கள் வழங்கப்படுவதாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வழங்க கோரி, பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு திடீரென படிக்கட்டில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் பல்கலைக்கழக விடுதி வார்டன் மற்றும் நிர்வாக பிரிவு அலுவலர்கள் விரைந்து வந்தனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, விடுதியில் தரமான உணவுகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தருவதாக பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பினர் உறுதியளித்தனர். இதை ஏற்று விடுதி மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் விடுதி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories: