`ஸ்மார்ட் சிட்டி'புதிய கட்டுமான பணிக்காக பாளை. மார்க்கெட்டில் கடைகள் இடித்து அகற்றம்: வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு

நெல்லை: நெல்லை  மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளை. மார்க்கெட்டில்  புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்காக   பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகராட்சி  ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம், பாளை. பஸ்  நிலையம், நேருஜி சிறுவர் கலையரங்கம், வஉசி விளையாட்டு அரங்கம்   ஆகியவை புதிதாக கட்டப்பட்டு  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு  வரப்பட்டுள்ளது. டவுன் பொருட்காட்சி திடலில் வர்த்தக  அரங்கம்,  சந்திப்பு பஸ் நிலையம், டவுன் காய்கறி மார்க்ெகட் ஆகியவற்றில் புதிய  கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் பாளை. காந்தி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய  கட்டுமான பணிக்காக அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த 538 கடைகளை காலி செய்ய  மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

ஆனால் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்க  வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாளையில் உள்ள  பழைய காவலர் குடியிருப்பு பகுதி, ஜவகர் மைதானம் ஆகிய இடங்களில்  பாளை. மார்க்கெட் வியாபாரிகளுக்காக மொத்தம் 538 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் வியாபாரிகள்,  குடிநீர், சுகாதார வசதி மற்றும் பொதுமக்கள்  வந்து செல்ல  நடைபாதை  உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு காந்தி  மார்க்கெட் கடைகளை காலி செய்யாமல் இருந்தனர். அடிப்படை வசதிகள்  செய்து கொடுக்கப்பட்ட பிறகு பொங்கல் பண்டிகை முடிந்ததும் கடைகளை காலி செய்வதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொங்கல்  பண்டிகை முடிந்தும், சில வியாபாரிகள் கடைகளை காலி செய்யாமல் இருந்தனர். தற்போது புதிய கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், கடைகளை இடித்து அகற்ற வசதியாக, காலி செய்யாத வாடகை கடைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலி செய்யப்படாத கடைகளை இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி  அதிகாரிகள், பொக்லைன் வாகனத்துடன் பாளை. மார்க்கெட் பகுதிக்கு நேற்று காலை  வந்தனர். அப்போது வியாபாரிகள் சிலர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி கடைகளை இடிக்க  எதிர்ப்பு தெரிவித்தனர். பொக்லைன் முன்பு படுத்து பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டதுடன், கடைகளை இடித்து அகற்ற எதிர்ப்பு  தெரிவித்த வியாபாரிகள் 10 பேரை, காவல்நிலையத்திற்கு அழைத்துச்  சென்றனர். தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் பாளை. மார்க்கெட்டில்  உள்ள கடைகளை இடித்து அகற்றும் பணி நடந்தது. கடைகள் இடிக்கப்படும் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி  மறுத்து தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.

Related Stories: