ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எல்லைப் பகுதியில் வருவாய்த்துறை சோதனைச்சாவடி அமைக்கப்படுமா? தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

கூடலூர்: தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் விலையில்லா ரேஷன் அரிசி தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்துவதை தடுக்க தேனி மாவட்ட தமிழக கேரள எல்லைப்பகுதிகளான கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு பகுதிகளில் போலீசாருடன் இணைந்து செயல்பட வருவாய்த்துறை சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு விலையில்லா அரிசி வழங்குகிறது.

இதில் கூடலூர், கம்பம், பாளையம், கோம்பை, போடி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சில ரேஷன் அரிசி வியாபாரிகள், அரிசியை ரேஷன் கடைகளிலிருந்தும், கூலி ஆட்கள் மூலம் பொதுமக்களிடமிருந்தும் குறைந்த விலைக்கு வாங்கி கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு வழியாக பஸ்களிலும், பைக்கிலும், வாகனங்களிலும் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர். அரிசி கடத்தலைத் தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், பறக்கும்படை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் தமிழக எல்லையை கடந்து கேரளாவுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யும் வகையில் தேனி மாவட்ட தமிழக, கேரள எல்லைப் பகுதிகளான கம்பம்மெட்டு, குமுளி பகுதிகளில் வருவாய்துறை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. ஒரு கிராம நிர்வாக அதிகாரி தலைமையில் இரு தலையாரிகள் என 3 பேர் போலீசாருடன் இணைந்து சோதனைச்சாவடிகளில் பணி செய்தனர். இதனால் அனைத்து வாகனங்களும் முறையாக சோதனை செய்யப்பட்டது.

ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் வழக்கமான பணிகள் தடைபடுவதாகக் கூறி சோதனைச்சாவடிக்கு பணிக்கு வருவதை நிறுத்தினர்.  இதைத்தொடர்ந்து தலையாரிகளும் சோதனைச்சாவடிக்கு பணிக்கு வருவதை படிப்படியாக நிறுத்திக்கொண்டனர். இதனால் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வருவாய்துறை சோதனைச்சாவடி அமைத்ததன் நோக்கம் நிறைவேறவில்லை. அரிசி கடத்தலைத் தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், பறக்கும்படை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும், முறையாக வாகன சோதனை செய்ய முடியாததால் முழுமையாக அரிசி கடத்தலை தடுக்க முடியவில்லை. இதனால் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கம்பம்மெட்டு, குமுளி தமிழக எல்லைப்பகுதிகளில் மீண்டும் வருவாய்துறை சோதனைச்சாவடி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஒரு கிலோ அரிசிக்கு ரூ.2 வீதம் கமிஷன்

2022 டிசம்பர் கணக்குப்படி தேனி மாவட்டத்தில் 4,31,155 ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளது. இந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க மாவட்டத்தில் 542 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. அதில் 513 கடைகள் கூட்டுறவு சங்கங்களாலும், 29 கடைகள் மகளிர் குழுக்களால் நடத்தப்படுகிறது. இதில் 431 கடைகள் முழு நேரமாகவும், 111 கடைகள் பகுதிநேர கடைகளாகவும் செயல்படுகிறது. இந்த கடைகளின் முலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 570 டன் அரிசி வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்திய சுமார் 40 டன் அரிசி வரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, பறக்கும்படை, தனிப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரேசன் அரிசி வியாபாரிகள் ரேஷன் கடைகளிலிருந்து மொத்தமாக அரிசியை வாங்குவதோடு, நகர் பகுதியில் வீடுதோறும் சென்று பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி வருவதற்கென்றே ஆட்களை வேலைக்கு வைத்துள்ளனர்.ஒரு படி ரேஷன் அரிசி ரூ.8 முதல் ரூ.10க்கு விலைக்கு வாங்கி வரும் இவர்களுக்கு ஒரு கிலோ அரிசிக்கு ரூ.2 வீதம் கமிஷன் வழங்கப்படுகிறது. பின்னர் இந்த ரேஷன் அரிசி மில்லில் தீட்டப்பட்டு, சிப்பங்களாக்கி கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு வழியாக வாகனங்களில் கேரளா கொண்டு செல்லப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து சமூகநல ஆர்வலர் யோகா ரவிராம் கூறுகையில், ‘‘ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவேண்டுமானால், எல்லைப்பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும். முன்பு அரிசி கடத்தலை தடுப்பதற்கென்றே தனியாக வருவாய்துறை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது குமுளி, கம்பம் மெட்டு பகுதியில் போலீஸ், வனத்துறை சோதனைச்சாவடிகள் இருந்தாலும் ஆட்கள் பற்றாக்குறை, நேரமின்மையால் அவர்களால் அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனையிட முடியவில்லை. அதனால் மீண்டும் வருவாய்துறை சோதனைச்சாவடி அமைக்கலாம்.

ஜிஎஸ்டி வரி அமல் படுத்தப்பட்டபிறகு குமுளி, கம்பம்மெட்டு பகுதியில் இயங்கி வந்த வணிகவரித்துறை சோதனைச் சாவடிகள் பூட்டப்பட்டு ஆளின்றி கிடக்கின்றன. குமுளி மலைச்சாலையில் முன்பிருந்த போலீஸ் சோதனைச்சாவடி கட்டிடம் செயல்பாடின்றி கிடக்கிறது. புதிதாக சோதனைச்சாவடி அமைப்பதற்குப்பதிலாக இந்த கட்டிடங்களிலேயே மீண்டும் வருவாய்துறை சோதனைச்சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தால் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்கலாம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: