×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜ கொடுத்த திடீர் எச்சரிக்கை காரணமாக தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக  அதிமுக ஓபிஎஸ் அணி இன்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். செந்தில்முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வது திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான இரு அணிகளையும் இணைக்க பாஜ நடத்திய பஞ்சாயத்து தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை நாங்கள் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை.  அதே நேரத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை. அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக ஒருவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படும்  பட்சத்தில் இரட்டை இலை சின்னத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற உத்தரவால் அதிமுகவில் இரண்டு அணியினரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றில் உள்ள சாதக, பாதகங்கள், பின்னடைவு, நீதிமன்ற உத்தரவுபடி பொதுக்குழு கூட்டம் நடத்தி வேட்பாளர் தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் தனது அணியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்றும், இன்று காலையும் ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கருப்பண்ணன், கே.வி. ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட ரிசார்ட்டிற்குள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நீதிமன்ற உத்தரவின்படி 2 தலைமையும் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொண்டர்கள் தீர்ப்பு அளிக்க உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே தர்மம் வெல்லும்” என்றார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,‘‘உச்ச நீதிமன்றம் கூறியபடி உடனடியாக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது என்பதால், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அதிமுக சார்பில்  தென்னரசு போட்டியிடுகிறார் என்ற தகவலை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதாக இருந்தால் ஆம் என்றும், எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் இல்லை என்றும் குறிப்பிட்டு அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் கடிதம் உடனடியாக திரும்ப அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுக பொதுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்பட 2675 உறுப்பினர்களுக்கு இன்றே கடிதம் அனுப்ப எடப்பாடி அணியினர் முடிவு செய்துள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் மேற்ப ட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி அணியில் இடம் பெற்றுள்ளதால் அவர்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, இரட்டை இலை சின்னம் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் பொதுக்குழு கருத்தை கேட்டு, அதன்படி ஒருமித்த வேட்பாளரை நியமித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர், அந்த தகவலை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. தற்போது, ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்துக்கும் நிர்வாகிகளை நியமித்துள்ளார். அவர்கள்தான் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அதனால் நீதிமன்ற உத்தரவுபடி, தற்போது ஓபிஎஸ் அணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் செந்தில்முருகனை ஆதரிப்பதாக அனைவரிடமும் கையெழுத்து வாங்கி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தலாமா அல்லது, ஓபிஎஸ் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை வாபஸ் வாங்கிக் கொண்டு, எடப்பாடி அணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தென்னரசை ஆதரிக்கலாமா? என்பது பற்றியும் ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்ததும் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று மதுரை புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் அவருக்கு பாஜ தரப்பில் இருந்து தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வந்தது. வேட்பாளரை உடனடியாக வாபஸ் வாங்குங்கள். எடப்பாடிக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று அண்ணாமலையும் ஓபிஎஸ்ஸிடம்  வலியுறுத்தினார்.

தொடர்ந்து பாஜ தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக தனது வேட்பாளரை வாபஸ் வாங்க முடிவு எடுத்தார். அதைத் தொடர்ந்து சென்னையில் தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரிடம் பாஜ அழுத்தம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களை சந்தித்து ஓபிஎஸ் அணி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது. தனது வேட்பாளரை வாபஸ் வாங்க முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்தார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் அணியின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.

Tags : Erode East ,OPS ,Baja , Sudden turn in Erode East by-election issue; OPS candidate's sudden withdrawal: Bowing to BJP intimidation, support for Edappadi candidate
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு