தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக ரூ.3 கோடி அரசு மானியம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், “தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிருவாகத்தில் உள்ள 88 திருக்கோயில்களில் பெரும்பாலானவற்றில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில்

3 கோடி ரூபாய் அரசு மானியம் ஆண்டுதோறும் வழங்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிருவாகத்திலுள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக 3 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே அவர்களிடம் வழங்கினார்.

     

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தில் 88 ஒருங்கிணைந்த திருக்கோயில்களின் நிருவாகமானது பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர்/ பொருளாளர் மற்றும் மேலாளரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்துடன் இணைந்துள்ள 88 திருக்கோயில்களில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால்  (UNESCO) உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், தாராசுரம், அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்கும் புன்னைநல்லூர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணிகோயில் எனப்படும் வெண்ணாற்றங்கரை, அருள்மிகு மேலசிங்க பெருமாள் திருக்கோயில், அருள்மிகு மணிகுன்ற பெருமாள் திருக்கோயில் மற்றும் அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில் ஆகிய முக்கிய திருக்கோயில்கள் உள்ளன.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட திருக்கோயில்களில் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது. முதன்மையாக வருவாய் வரப்பெறும் தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் புன்னைநல்லூர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்களின் வருவாயை கொண்டே இதர திருக்கோயில்களின் நிர்வாகம்  நிதி பற்றாக்குறையுடன் தற்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. இந்நிதி பற்றாக்குறையை போக்கிடும் வகையில் அரசு மானியமாக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 27.12.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான அரசு மானியத்தை 1 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: