எத்தனை முறை உருமாறி கொரோனா வந்தாலும் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் மிகவும் பாதுகாப்பானது: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: புதிதாக உருவாகி வரும் மாறுபாடுகளுக்கு கோவாக்ஸின் பூஸ்டர் டோஸ் பாதுகாப்பானது என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று குறித்து மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்த எழுத்துப்பூர்வ பதில் விவரம் வருமாறு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன், பக்கவிளைவுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. 2021 மே மாதம் மற்றும் ஜூலை இடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படடது. இதில் தடுப்பூசி செயல்திறன் கோவிஷீல்டில் 85 சதவீதமாகவும், கோவாக்சினில் 71 சதவீதமாகவும் கண்டறியப்பட்டது. அதே சமயம் கொரோனா மாறுபாடுகளுக்கு இரண்டு தடுப்பூசிகளின் திறனும் ஒன்றாக இருந்தது.

அதே சமயம் புதிதாக உருவாகி வரும் மாறுபாடுகள் காரணமாக  நோய்த்தொற்றுகளைக் குறைக்கவும், தொடர்ச்சியான நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தவும் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் பாதுகாப்பானது. அதோடு மிகவும் அவசியமான ஒன்று என்று ஆய்வு முடிவுகள் காட்டுகிறது. பொது சுகாதார அவசரநிலைகளுக்கு எதிராக நமது நாட்டை சிறப்பாக தயார்படுத்தும் நீண்ட கால இலக்குடன், பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் ரூ.64,180 கோடி செலவில்  தொடங்கப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சிகிச்சை மருத்துவமனை, 150 படுக்கை வசதி ஆகியவை அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: