உள்ளாட்சி தேர்தலுடன் கூட்டணி முடிந்துவிட்டது அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளதா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்: எடப்பாடி அணி பொன்னையன் பரபரப்பு பேட்டி

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனியாக தான் போட்டியிட்டது, இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளதா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும், பாஜ விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்றும் பொன்னையன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக-பாஜ கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாத சூழலில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு நடந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவு முன்னாள் அமைச்சர் பொன்னையன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுகவை ஒருங்கிணைத்து நடத்துவது அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆவி. அந்த அடிப்படையில் ஒன்றரை கோடி தொண்டர்களும் 94.5 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும், தமிழகத்து மக்களும் எடப்பாடி பழனிசாமி  பின்னால் இயங்குகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரையில் சட்ட ரீதியாக சில கடமைகள் உண்டு.   அதிமுகவின் பிரச்னைகளை ஆழமாகப் பார்த்து, சட்டத்துக்குட்பட்டு அந்தந்த கட்சிகளின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதுதான் தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் கோட்டை விட்டுவிட்டது. இப்போது நீதிமன்றத்தை கைகாட்டுவது சட்டத்தை மீறிய செயல். உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என போட்டிருக்கும் மனு சட்டத்துக்கு புறம்பானது. அதை நீதிமன்றம் சரி செய்யும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை அங்கீகரித்து ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இப்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இன்று வரை ஓ.பன்னீர்செல்வம் தடை வாங்கவில்லையே. உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜ தனியாகத்தான் போட்டியிட்டது. அதனால் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கே பொருளில்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதனால் பாஜவும் எங்கள் பக்கம் இருக்கலாம் அல்லவா? பாஜவும் எங்களை விரும்பலாம் அல்லவா? எங்களுக்காக அவர்களும் பணியாற்றலாம் அல்லவா? பொறுத்திருந்து பாருங்கள். பாஜ தலைவர்கள் இன்று ஓபிஎஸ்-இபிஎஸ்சை சந்தித்து பேசுவது பற்றி அவர்களிடம் கேளுங்கள்.

வடநாடுகளில் பாஜ எப்படிப்பட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது. பாஜவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சிகளை எப்படி எல்லாம் பாஜ பிடித்தது என்பது உங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். நாங்கள் பாஜவிடம் எச்சரிக்கையாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜ தனியாகத் தான் போட்டியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கே பொருளில்லை.  இவ்வாறு அவர் கூறினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருந்த நிலையில் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எடுத்திருப்பதை போன்று பொன்னையன் கூறியிருப்பது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: