அரசு விரைவு பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய‘சென்னை பஸ் செயலி’ அறிமுகம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் இருப்பிடத்தை ‘சென்னை பஸ் செயலி’ மூலம் அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.  இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தற்போது மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை சென்னை பஸ் செயலி மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனை தொடர்ந்து தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக அனைத்து பேருந்துகளிலும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு Chennai Bus App மூலம் இந்த சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களது பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும், பேருந்து தடம் குறித்த Search Route optionஐ கிளிக் செய்து குறிப்பிட்ட வழித்தட எண்களில் இயங்கும் அனைத்து பேருந்துகளின் விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேவையான தடத்தினை தேர்ந்தெடுத்து கிளிக் செய்வதன் மூலம் தற்போது அந்த தடத்தில் வருகின்ற பேருந்துகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

பேருந்தின் நிகழ்நிலை இருப்பிட விவரத்தின் பகிர்வு மூலமாக பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இருப்பிட விவரத்தினை பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு குறுந்தகவல் மூலமாக அனுப்பும் வசதி உள்ளது. பயணிகள் தங்களது பயணம் குறித்த கருத்துக்களை பதிவு செய்து அனுப்பும் வசதியும் உள்ளது. மேலும், இச்செயலி மூலம் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் லிங்க்-ஐ கிளிக் செய்வதன் மூலம் அவர்களது முன்பதிவு செய்த பேருந்து எந்த இடத்தில் வருகிறது என்ற விபரத்தையும் அறியலாம். மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் பேருந்துகளின் வருகையினை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்ப புறப்பாட்டினை திட்டமிட இந்த செயலி பயன்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: