தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிர்பயா நிதி எவ்வளவு? திமுக எம்பி கனிமொழி கேள்வி

புதுடெல்லி: திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை திமுக குழு துணைத் தலைவரும் எம்பியுமான கனிமொழி எழுத்துப்பூர்வமாக கேட்ட கேள்வியில், ‘நிர்பயா நிதியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் என்ன?  நிர்பயா நிதியத்தின் பயன்பாட்டிற்காக தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் விவரங்கள் என்ன? கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதி பற்றிய விவரங்கள் என்ன?  என்று கேட்டிருந்தார். இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்துள்ள பதிலில், ‘தற்போதுவரை, நிர்பயா நிதியத்தின் கீழ் மொத்தம் 38 திட்டங்களுக்காக ரூ.9228.50 கோடி ஒதுக்கப்பட்டு உயர்மட்ட நிதி குழுவின் பரிசீலனையில் உள்ளது.

இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் சில தடுமாற்றங்கள் நடைமுறை ரீதியில் இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட 38 திட்டங்களில் சில நேரடியாக ஒன்றிய அரசு அமைச்சகங்களாலும், ஒன்றிய அரசுத் துறைகளாலும் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில் பெரும்பாலானவை மாநில, யூனியன் பிரதேச அரசு நிர்வாகங்களால்தான் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள், செயல்படுத்தும் துறைகளில் இருந்து வந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு நிர்பயா நிதியத்தில் இருந்து 2017-18  நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை ரூ.314.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ’ என தெரிவித்தார்.

* ‘தனியாருக்கு குத்தகை விடப்பட்ட விமான நிலையங்கள் வாயிலாக ஈட்டிய வருவாய்’ குறித்து நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே. சிங் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், ‘நாட்டிலுள்ள முக்கிய விமான நிலையங்களில் வழங்கப்படும் வானூர்தி சேவைகள் தொடர்பான கட்டணங்களை நிர்ணயம் செய்ய ஏஆர்ஏ சட்டம், 2008ன் கீழ் இந்திய விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (ஏஇஆர்ஏ) என்ற ஒரு தன்னிச்சையான கட்டுப்பாட்டாளரை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. முதலீட்டின் நியாயமான வருவாய் விகிதம் மற்றும் ஐந்தாண்டுகளுக்குக் கொடுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் காலத்திற்கான செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏரோநாட்டிக்கல் கட்டணத்தை நிர்ணயிக்கிறது’ என தெரிவித்தார்.

* தென்சென்னை தொகுதி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் விதி எண் 377ன் கீழ் பெண் படுகொலை தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தினார். அதில், ‘பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது அவர்களின் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. மாறாக அது ஆண் மேலாதிக்க உணர்வின் தவறான வெளிப்பாடாகும்.  இந்த வகையான வன்முறை, குற்றவியல் நீதி அமைப்பில் தவிர்க்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தேசிய குற்ற ஆவண காப்பக பதிவிலும் தனியாக பதிவு செய்யப்படவில்லை. இந்திய தண்டனைச் சட்டமும் பெண் படுகொலை பற்றி விரிவான வரையறையை உள்ளடக்கவில்லை. வரதட்சணை தொடர்பான மரணங்கள் அல்லது குடும்ப தகராறின் பின்னணியில் நடந்ததாக குறிப்பிடுகின்றன. எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண் படுகொலையை விரிவாக சேர்க்க தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கவும், பயனுள்ள வகையில் நம்பகமான தரவு சேகரிப்பை எளிதாக்க வேண்டும்’ என கூறி உள்ளார்.

Related Stories: