கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்த கலந்தாய்வு: அமைச்சர் பங்கேற்பு

சென்னை: கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர் பாபு தலைமையில் நடந்தது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர் பாபு தலைமையில் நேற்று சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமக் கூட்ட அரங்கில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்துதல் தொடர்பாக, சென்னை மாநகராட்சி, சென்னை காவல் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தை மேம்படுத்திடும் வகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை நவீனமயமாக்குதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறை களைந்து, சீரான போக்குவரத்திற்கு உரிய ஏற்பாடு செய்தல், வளாக பகுதியில் உலவிடும் கால்நடைகளால் ஏற்படும் பிரச்னைகளை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சரிசெய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வளாகத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துதல், வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை சீரமைத்தல் மற்றும் தனி காவல் நிலையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து விரிவாக கலந்தாய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அபூர்வா, பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, கூடுதல் காவல் ஆணையர் அன்பு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: