யார் பெரியவன் என்ற தகராறில் நண்பனை கொன்ற 4 பேர் கைது

துரைப்பாக்கம்: கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராகவா (எ) ராகவேந்திரன் (25). இவர், நீலாங்கரை அண்ணா சாலையில் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்குள் யார் பெரியவர் என்று தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ராகவேந்திரன் கத்தியை காட்டி தனது நண்பர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், இருவரை லேசாக கத்தியால் தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் ராகவேந்திரன் வைத்திருந்த கத்தியை பறித்து அவரை குத்திவிட்டு தப்பினர்.

இதில், பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராகவேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ராகவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த, நீலாங்கரை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது ராகவேந்திரனின், நண்பர்களான திருவான்மியூர் சிங்காரவேலன் நகரை சேர்ந்த பாலாஜி (19), அஜய் (20), ஈஞ்சம்பாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த நஜூமுதீன் (22), நீலாங்கரை அறிஞர் அண்ணாநகரை சேர்ந்த விவேக் (22) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 4 பேரையும் நேற்று கைது செய்து, விசாரணை நடத்தியதில் பாலாஜி, அஜய், நஜூமுதீன் ஆகியோர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: