சில்லி பாயின்ட்...

* விராத் கோஹ்லி இல்லாத டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி பேட்டிங் வரிசையில் 3வது வீரராக களமிறக்குவதற்கு ஏற்றவர் ராகுல் திரிபாதி தான் என நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

* ‘2026ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. கால்பந்து விளையாட்டில் எனது நிலை, உடல்தகுதி போன்ற அம்சங்களை வைத்தே இதில் இறுதி முடிவு எடுப்பேன்’ என்று அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி (35 வயது) கூறியுள்ளார்.

* 2007ல் நடந்த முதலாவது ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் மிஸ்பா உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய ஆல் ரவுண்டர் ஜோகிந்தர் ஷர்மா (39 வயது) அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

* ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் எந்த நாட்டையும் சாராத நடுநிலையாளர்களாக பங்கேற்க ஆட்சேபனை இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

* வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் டெஸ்ட் புலவாயோ, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் உலகில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் அசைக்க முடியாத சக்தியாக எழுச்சி பெறும் என்று முன்னாள் கேப்டன் பிரையன் லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* ‘சூப்பர் பார்மில் இருக்கும் இளம் வீரர் ஷுப்மன் கில், இந்திய அணிக்கு கிடைத்துள்ள வரம். கோஹ்லியை போன்றே மிகத் திறமையானவர் கில். அவரது பேட்டிங் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மூன்று வகை கிரிக்கெட்டிலும் அவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். 2019ல் இந்திய அணியில் அறிமுகமாக கில் இது வரை 13 டெஸ்ட், 21 ஒருநாள், 6 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 4 சதம், டெஸ்ட் மற்றும் டி20ல் தலா 1 சதம் அடித்துள்ளார்.

Related Stories: