ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: போராடி வென்றது மத்திய பிரதேசம்; பெங்கால் அணியும் தகுதி

இந்தூரில் ஆந்திரா அணிக்கு எதிராக நடந்த ரஞ்சி கோப்பை காலிறுதியில், மத்திய பிரதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆந்திரா 379 ரன், மத்திய பிரதேசம் 228 ரன் எடுத்தன. ஆந்திரா முதல் இன்னிங்சில் 151 ரன் முன்னிலை பெற்றாலும், 2வது இன்னிங்சில் 93 ரன்னுக்கு சுருண்டதால் ம.பி. கை ஓங்கியது. 245 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய அந்த அணி, 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன் எடுத்திருந்தது.

நேற்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 77 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. யஷ் துபே 58, ஹிமான்ஷு 31, ஷுபம் ஷர்மா 40, ரஜத் பத்திதார் 55, கேப்டன் ஸ்ரீவஸ்தவா 2 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஷரன்ஷ் ஜெயின் 28, ஹர்ஷ் காவ்லி 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். போராடுகிறது சவுராஷ்டிரா: ராஜ்கோட்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடக்கும் காலிறுதியில் சவுராஷ்டிரா அணி 252 ரன் என்ற இலக்கை நிர்ணயித்து போராடி வருகிறது. முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 303, பஞ்சாப் 431 ரன் குவித்தன. சவுராஷ்டிரா 2வது இன்னிங்சில் 379 ரன் குவித்து ஆல் அவுட்டானது (கேப்டன் அர்பித் வாசவதா, சிராக் ஜனி தலா 77, பிரேரக் 88, பார்த் பட் 51 ரன்). 3 காலிறுதி ஆட்டங்கள் 4ம் நாளில் முடிவுக்கு வந்த நிலையில், சவுராஷ்டிரா - பஞ்சாப் மோதும் காலிறுதி மட்டும் இன்று 5வது மற்றும் கடைசி நாளுக்கு சென்றுள்ளது.

Related Stories: