பீஜிங்: கடன்களை திருப்பி செலுத்த இலங்கைக்கு சலுகை அளிக்க தயாராக உள்ளதாக சீனா உறுதி அளித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் தொகை ரூ.4.19 லட்சம் கோடியாகும். பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு இந்தியா ரூ.36 ஆயிரம் கோடி அவசர கால கடன் உதவி அளித்துள்ளது. வெளிநாட்டு கடன்களில் ஜப்பான், ஆசிய வளர்ச்சி வங்கிக்கு அடுத்தபடியாக சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனாவுக்கு இலங்கை கொடுக்க வேண்டிய கடன் தொகை இதில் 10 சதவீதமாகும். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ரூ.23 ஆயிரத்து 829 கோடி அவசர கால கடன் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு கடன் மறுசீரமைப்பு பணிகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு வங்கி கடனை திருப்பி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்துக்கு சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்தார்.