வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் விரைவில் சீனா பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் சீனாவின் உளவு விமானம் அமெரிக்க வான் எல்லையில் பறப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று முன்தினம் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜென் பாட் ரைடன் கூறுகையில்,\” சீன உளவு பலூன் பறப்பதை அமெரிக்க அரசு கண்டறிந்துள்ளது. ராணுவம் பலூன் இயக்கத்தை கண்காணித்து வருகின்றது. இது குறித்து அதிபர் பைடனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பலூன் வியாழன்று அணு ஏவுகணை தளமான மொன்டானாவிற்கு மேலே பறந்துள்ளது. சுமார் 3 பேருந்துகள் அளவுக்கு பெரியதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடஅமெரிக்க வான்வெளி கட்டளையகம் இந்த பலூனை பின்தொடர்ந்து நெருக்கமாக கண்காணித்து வருகின்றது. பலூன் கண்டறியப்பட்டதும் முக்கியமான தகவல்கள் சேகரிப்பதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டது. வணிக ரீதியிலான விமான போக்குவரத்துக்கு மேலே பலூன் பயணிப்பதாலும், தரையில் உள்ள மக்களுக்கு அல்லது ராணுவத்துக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது \” என்றார். உளவு பலூனை சுட்டு வீழ்த்தினால் அதன் பாகங்கள் பூமியில் விழுந்து பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் பலூனை சுட்டு வீழ்த்த வேண்டாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் அதன் செயல்பாடுகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.