அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்: எடப்பாடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதை அக்கட்சியின் பொதுக்குழுவே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு தரவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவின் போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னாள் எம்எல்ஏ தென்னரசும், அதேபோன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவரும் தனித்தனியாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர் விண்ணப்ப படிவத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.  

இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி புதிய இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையின்போது, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும், அதேப்போன்று எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் நேற்று முன்தினம் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மேற்கண்ட இடைக்கால மனு  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் எச்.ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ”எடப்பாடி பழனிசாமியை நாங்கள் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை.

அதிகாரப்பூர்வமாக ஒருவர் தேர்தெடுக்கும் பட்சத்தில் சின்னத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எங்களால் எந்தவித முடிவும் எடுக்க முடியவில்லை என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான குருகிருஷ்ணகுமார், பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் முடிவெடுக்க முடியும். மேலும் வேட்பாளர் விண்ணப்பப் படிவத்தில் ஒங்கிணைப்ளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்து கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் ஈரோடு இடைத்தேர்லில் வேட்பாளர் விண்ணப்பத்தில் கையெழுத்து கேட்டால் அதனை போடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு தான் எங்களை நிராகரிக்கிறார்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமாசுந்தரம், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என்ற  தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்க முடியாது என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ”அதிமுகவை பொறுத்தமட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியில் பொதுக்குழுவே வேட்பாளரை முடிவு செய்யும். மேலும் பொதுக்குழு கூட்டப்படும் போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உட்பட ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

நேரமின்மை காரணமாக ஒரு வேளை பொதுக்குழுவை திடீரென கூட்ட முடியவில்லை என்றால் வேட்பாளர் பெயரை சர்குலேஷன் முறையில் அதாவது தீர்மானத்தை சுற்றுக்கு விட்டு முடிவு செய்யலாம்.   இதையடுத்து இறுதி செய்யப்படும் வேட்பாளரின் பெயரை கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு  அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவு  ஈரோடு கிழக்கு இடைதேர்தலுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது என உத்தரவிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.

Related Stories: