பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை மலையில் 17ம் நூற்றாண்டு மாமன்னர் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

குடியாத்தம்: பேரணாம்பட்டு ரங்கம்பேட்டை மலையில் 17ம் நூற்றாண்டு 3 மாமன்னர் கல்வெட்டுகள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் ஊராட்சி பகுதியில் உள்ள ரங்கம்பேட்டை மலை  பகுதியில் பல்லவர் கால  கல்வெட்டு சிலை இருப்பதாக குடியாத்தம் அடுத்த காந்தி நகரில் உள்ள அரசு திருமகள் ஆலைகள் மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் விஜயரங்கத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி விஜயரங்கம் தலைமையில் பேராசிரியர் ஜெயவேல் மற்றும் வரலாற்றுத்துறை இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நேற்று ரங்கம்பேட்டை மலை பகுதியில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது முள் புதார், கொடிகள் சூழ்ந்து சிதலமடைந்து மண்ணுக்குள் புதைந்திருந்த  கல்வெட்டுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து பார்த்தனர். அதில் மன்னர் சிலைகள் இருந்தது தெரிய வந்தது. இவை 17ஆம் நூற்றாண்டின் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என பேராசிரியர் விஜயரங்கம் கூறினார்.

இந்த கல்வெட்டு சிலையில் மன்னர் போருக்கு செல்லும் காட்சி,  மன்னரின் 2 மனைவிகள், மன்னரின் மகள் போருக்கு செல்லும் சிலை  இருந்தது. இதில் நாய், குதிரை   பணிப்பெண்கள் என பல காட்சிகள் அதில் இடம்பெற்று இருந்தது. மேலும் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று சிலைக்கு  மஞ்சள் குங்குமம் இட்டு வழிபட்டனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறியதாவது: இவை 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலை  இருந்ததாகவும் இதை வழிபட்டு இருந்ததாகவும் அந்த சமயத்தில் காலரா நோய் வந்த பிறகு அங்கு இருந்து மக்கள் வேறு இடத்திற்கு சென்று விட்டதால் அந்த கல் சிலைகள்  பூமிக்குள் புதைந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

Related Stories: