தெப்பக்காடு பகுதியில் புலியை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா

ஊட்டி: முதுமலை தெப்பக்காடு பகுதியில் புலியை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு யானை, சிறுத்தை, கரடி மற்றும் புலி போன்றவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாம் பகுதியில் வசித்து வரும் மாரி என்ற பெண் விறகு சேகரிக்க வனப்பகுதிகளுக்குள் சென்ற போது, அங்கு மறைந்திருந்த புலி தாக்கி உயிரிழந்தார். மாரியை கொன்ற புலியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், புலி தாக்கி பழங்குடியின பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மேலும், புலி தாக்கப்பட்ட பகுதி மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரமே இருந்த நிலையில், மீண்டும் மக்கள் வாழும் பகுதிக்கு புலி வரலாம் என்ற நிலை உள்ளதால், அங்கு வாழும் மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் யானைப்பாடி ஆகிய வனப்பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதனை தினமும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,``முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு பகுதியில் இரு நாட்களுக்கு முன் புலி தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார். இதனால், அப்பகுதிகளில் வாழும் மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.

இதற்காக, இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன ஊழியர்கள் கொண்டு இப்பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Related Stories: