மரைக்காகோரையாறு பாலம் அருகே பயணிகளை அச்சுறுத்தும் ஆபத்தான நிழலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் மரைக்காகோரையாறு பாலம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழற்கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதியதாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி, ஒன்றியத்தின் பெரிய ஊராட்சிகளின் ஒன்றாகும். இதில் வேதாரண்யம் - முத்துப்பேட்டை சாலையில் உள்ள மரைக்காகோரையாறு பாலம் அருகே ஆண்கள், பெண்கள் என இரண்டு பகுதியாக அமர்ந்து இருக்கும் வகையில் பயணிகள் நிழற்கட்டிடம் ஒன்று உள்ளது. சுமார் 10வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு இயங்கி வந்தது.

இங்கிருந்துதான் இடும்பாவனத்தை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியுர் பயணங்களை மேற்க்கொண்டு வருகின்றனர். அதேபோல் இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் முத்துப்பேட்டை - வேதாரண்யம், அதிராம்பட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதியில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த பயணிகள் நிழற்கட்டிடம் பயனடைந்து வந்தது.

இந்தநிலையில் தற்போது பயணிகள் நிழற்கட்டிடத்தின் மேல் சிலாப் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவில் எலும்புகூடாக காட்சியளிக்கிறது. கட்டிட சுவர்களும் சேதமாகி உருக்குலைந்து எந்தநேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பயணிகள் நிழற்கட்டிடத்தை இடித்துவிட்டு புதியதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் பத்து ஆண்டுகளாக இருந்த கடந்த ஆட்சியின் அதிகாரிகள் முன்வராத நிலையில் அந்த கட்டிடம் அதே நிலையில் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த ஆபத்தை உணராமல் இதை பயன்படுத்தி வருகினறனர்.

மேலும் பல மாணவர்கள் பொதுமக்கள் பேருந்து ஏற அப்பகுதியில் உள்ள கடைகளின் வாசலில் நிற்பது அல்லது சாலையோரங்களில் ஆபத்தான வகையில் நிற்பது போன்ற பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் தற்பொழுது கடுமையான வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேபோல் அவ்வபோது பெய்யும் மழையில் நனைந்து நிற்கும் அவலமும் உள்ளது. அதனால் பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து இந்த பழுதடைந்த இந்த பயணிகள் நிழற்கட்டிடத்தை இடித்துவிட்டு அப்பகுதியில் மீண்டும் புதியதாக பேருந்து நிழற்கட்டிடம் உடன் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: