கொரோனா பரவலுக்கு பின் போதியவருவாய்யின்றி தவித்து வரும் மசினகுடி பகுதி தொழிலாளர்கள்

நீலகிரி: கொரோனா பரவலுக்கு பின் போதியவருவாய்யின்றி தவித்து வரும் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதைகை அருகே உள்ளது மசினகுடி பிரசிதிப்பெற்ற சுற்றுலா தலமான இங்கு வனப்பகுதிக்குள் ஜீப் சவாரி செய்து கொண்டு வனவிலங்குகளை ரசித்து பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதுமலை புலிகள் காப்பகம் சார்பாக சூரல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டு தினந்தோறும் காலை முதல் மாலை வரை ஜீப் சவாரிக்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த ஜீப் சவாரியை நம்பி மசினகுடி, மாவனல்ல, வாழைத்தொடம், மாயர், தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இருந்து வந்துள்ளது.

ஆனால் கொரோனா பரவலுக்கு பின் சூரல் சுற்றுலா திட்டம் கைவிடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் இதனை நம்பி இருந்த தொழிலாளர்கள் 50% மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மரவக்கண்டி அணை,குறும்பர் பள்ளம் ஏரி ஆகியவற்றில் படகு சவாரியை தொடங்க வேண்டும் என சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மின்வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள  அணையின் ஒரு பகுதியில், வனப்பகுதி உள்ளதால் படகுசவாரி செல்பவர்கள், வனவிலங்குகளையும் கண்டு மகிழமுடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இத்திட்டத்திற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு விரைவில் படகு சவாரியை தொடங்க வேண்டும் என்று மசினகுடி தொழிலாளர்கள் சார்பில் தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Related Stories: