சிறந்த சுற்றுலா தலமாக அமராவதி, திருமூர்த்திமலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?.. பயணிகள், பக்தர்கள் எதிர்பார்ப்பு

உடுமலை: அடிப்படை வசதிகள் இல்லாத அமராவதி, திருமூர்த்திமலை சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள், பயணிகள், பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்களாக மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள அமராவதி, திருமூர்த்திமலை பகுதிகள் உள்ளன. அமராவதி அணை, அதையொட்டி, முதலை பண்ணை, மூணாறு சாலையில் உள்ள சின்னாறு, கூட்டாறு பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எந்த அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படாமல் உள்ளது.

அமராவதி அணையின் கீழ் உள்ள பூங்கா பராமரிப்பின்றி, காய்ந்து போய் கிடக்கிறது. மக்கள் இளைப்பாற கூட இடமில்லை. கழிவறை வசதி, குடிநீர் வசதி, பார்க்கிங் வசதி உள்ளிட்டவை கிடையாது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆனால் நுழைவு கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. சின்னாறு வனத்தில் உள்ள கூட்டாற்றில் பரிசல் சவாரி நிறுத்தப்பட்டு பல ஆண்டு ஆகிவிட்டது. இதனால் மலைப்பகுதிக்கு ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைகின்றனர். இங்கும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது.

திருமூர்த்தி அணை: உடுமலையில் இருந்து 22 கிமீ தொலைவில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கு பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில், மீன் பண்ணை, நீச்சல் குளம் உள்ளிட்டவை உள்ளன. தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோயில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு பக்தர்கள் நடந்து சென்று குளிக்கின்றனர். சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை மூலம் திருமூர்த்திமலையில் ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் வருமானம் வருகிறது.

அமாவாசை, பவுர்ணமி தினங்கள், சபரிமலை சீசனில் திருமூர்த்திமலையில் பக்தர்கள்  கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க, உணவருந்த, குழந்தைகள் விளையாட பூங்கா வசதி இல்லை. அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்திலும், சாலையோரங்களிலும்தான் சுற்றுலா பயணிகள் சாப்பிட வேண்டி உள்ளது. இதையடுத்து, திருமூர்த்தி அணை பகுதியில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு ரூ.2 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

அணையை சுற்றி 2 கிமீ சுற்றளவில் பூங்கா அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கியது. இதற்காக சுற்றிலும் இருந்த கருவேல மரங்கள், புதர்களை வெட்டி அகற்றும் பணி நடந்தது. பின்னர் பாதியிலேயே இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. நிதியும் ஒதுக்கப்படவில்லை. பணிகளும் நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்களின் சிரமம் தொடர்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் மலம்புழா அணையின் கீழ் உள்ள பூங்கா மிகச்சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.

அதேபோல, திருமூர்த்திமலை மற்றும் அமராவதியில் அடிப்படை வசதிகளை செய்து, மேம்பாடு செய்தால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம் அரசுக்கு வருமானம் கிடைப்பதோடு, சுற்றுலா தொடர்பான தொழில்களும் மேம்படும். இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு  விரைந்து எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இப்பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்; பணிகளை முனைப்புடன் அதிகாரிகளுடம், அரசும் மேற்கொள்ள வேண்டும் எனவும் சுற்றுலா ஆர்வலர்கள், பக்தர்கள், பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Stories: