அதானி குழு பங்கு வர்த்தக மோசடி விவகாரம் நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்: இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி

புதுடெல்லி: அதானி குழும பங்கு வர்த்தக மோசடி விவகாரம் தொடர்பாக  இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடங்கியது. நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மக்களவை தேர்தலுக்கு முன்பு மோடி அரசின் கடைசி முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. நேற்று காலை அவை கூடுவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது பங்கு வர்த்தகத்தில் தொழில் அதிபர் அதானி குழும மோசடி புகார் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று மக்களவை கூடியதும் காங்கிரஸ், திமுக, சிவசேனா, இடதுசாரி எம்பிக்கள், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, கேரளா காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து அதானி குழும பங்கு முறைகேடு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி வழங்க மறுத்தார்.  

ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு பா.ஜ எம்பிக்களும் கோஷம் எழுப்பியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்தது. மல்லிகார்ஜூன கார்கே, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம்ஆத்மி சஞ்சய் சிங் உள்ளிட்ட 9 எம்பிக்கள் அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க விதி எண் 267ன்கீழ் நோட்டீஸ் கொடுத்தனர்.

வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு அதானி விவகாரம் குறித்தும், அவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் நிலை குறித்தும், பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ள எல்ஐசி பணம் குறித்தும் விவாதிக்க வலியுறுத்தினர். இந்த நோட்டீசை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நிராகரித்தார். நோட்டீஸ்கள் முறைப்படி வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். இதனால் எம்பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பினார்கள். அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்ற நேரடி கண்காணிப்பு அடிப்படையில் தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இதை தன்கர் ஏற்கவில்லை. இதனால் மாநிலங்களவை முதலில் 2 மணி வரையும், அதை தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: