இந்தியாவில் முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள்

சென்னை: இந்தியாவிலேயே, சென்னை விமான நிலையத்தில் 5 மல்டி பிளாக்ஸ் தியேட்டர்கள் கட்டப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையம் ரூ.2,400 கோடியில் விரிவுபடுத்தப்படுகிறது. இதில், சுங்க மற்றும் குடியுரிமை சோதனை, பயணிகள் பாதுகாப்பு சோதனை போன்றவைகளுக்கு கூடுதல் கவுன்டர்கள், முக்கிய பிரமுகர்கள் கூடுதல் ஓய்வு அறைகள், பயணிகளுக்கான கூடுதல் தங்கும் இடவசதி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கான அடுக்குமாடி மல்டி லெவல் கார் பார்க்கிங் போன்ற பல்வேறு வசதிகளுடன் புதிய முனையம் அமைகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட அடுக்குமாடி நவீன வாகன பார்க்கிங், டிசம்பர் 4ம் தேதி திறக்கப்பட்டது. மேலும், வணிக வளாகத்தை, பிப்.4ம் தேதி (நாளை) ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைக்கிறார். இந்நிலையில், விமான நிலையத்தில் பயணிகளின் பொழுது போக்கிற்காக, 5 திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட திரையரங்கு நேற்று முன்தினம் முதல் தினம் செயல்பாட்டிற்கு வந்தது.

இது இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை நடிகர் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி ஆகியோர் கலண்டுகொண்டு திறந்து வைத்தனர். மேலும் நடன நிகழ்ச்சிகள், புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்பட்டன. இதனால், விமானநிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகள் தங்கள் நேரத்தை சோர்வில்லாமல், பொழுதுபோக்குவதற்கு சிறந்த இடமாக அமையும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

* வணிக வளாகம் நாளை திறப்பு

இதுகுறித்து, விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: விமான நிலையத்தின் முன் பகுதியில் 6 அடுக்கு வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்த நிலையில், வணிக வளாகம் பிப்.4ம் தேதி (நாளை) துவக்கி வைக்கப்பட உள்ளது. ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா துவக்கி வைக்க உள்ளார். அப்போது, உணவு வளாகப் பகுதி செயல்பாட்டுக்கு வர உள்ளது. அதோடு அங்கு அமைக்கப்பட்ட திரையரங்கம் செயல்பட உள்ளதாகவும் தகவல் வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: