திருமணமான காதலியுடன் தனிகுடித்தனம் வாலிபர் படுகொலை வழக்கில் பெண்ணின் உறவினர்கள் கைது: தீவிர விசாரணை

புழல்: திருமணமான காதலியுடன் தனிக்குடித்தனம் நடத்திவந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் 2 சகோதரர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதாசந்தர் (22). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2 மாதத்துக்கு முன் செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி இரவு சுதாசந்தர் ஆட்டோவில் ஒரு இளம்பெண்ணுடன் புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாளையம் சாலையில் சென்றுள்ளார்.

அப்போது, பைக்கில் வந்த ஒரு கும்பல், ஆட்டோவை மறித்து நிறுத்தி, சுதாசந்தருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் கத்தியால் சுதாசந்தரின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார். அவரது உடலை பார்த்து இளம்பெண் கதறி அழுதார். தகவலறிந்த புழல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சுதா சந்தருடன் ஆட்டோவில் சென்ற இளம்பெண் ஆவடி அடுத்த மோரை பகுதியை சேர்ந்த ராகிணி என்று தெரியவந்தது. ராகிணியை கடந்த 3 வருடங்களாக சுதாசந்தர் காதலித்துள்ளார்.

இது ராகிணியின் பெற்றோருக்கு தெரியவந்ததும், கடந்த ஒரு வருடத்துக்கு முன் ராகிணிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்து விட்டனர். இதன்பிறகு சுதாசந்தர், ராகிணியுடன் ஆவடியில் தனிகுடித்தனம் நடத்தியுள்ளார். பின்னர், கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் செங்குன்றம் லட்சுமிபுரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளார் என்று தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆட்டோ டிரைவர் கார்த்திக் (30) என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில், சுதாசந்தர் கொலை தொடர்பாக ராகிணியின் அண்ணன்கள் ஆவடி வெள்ளச்சேரி பகுதியை சேர்ந்த பரத் என்கிற ராபின் (30), உதயா (32) மற்றும் ராகிணி கணவரின்  சகோதரி சுஸ்மிதா (26) ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: