கொலிஜியம் பரிந்துரை செய்த 142 நீதிபதிகள் பட்டியல் நிலுவையில் உள்ளது: அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

புதுடெல்லி: கொலிஜியம் பரிந்துரை செய்த 142 நீதிபதிகள் பட்டியல் நிலுவையில் உள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:  உயர் நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளை 6 மாதங்களுக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டும் என்ற விதியை கொலிஜியம் பின்பற்றவில்லை.  ஜனவரி 30ம் தேதி நிலவரப்படி  t236 காலியிடங்கள் (தற்போதுள்ள 191, அடுத்த 6 மாதங்களில் எதிர்பார்க்கப்படும் 45 காலியிடங்கள்) தொடர்பான பரிந்துரைகள் இன்னும் அரசுக்கு வரவில்லை. ஜனவரி 30ம் தேதி வரை  மொத்தம் 18 பரிந்துரைகள் மறுபரிசீலனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 6 பரிந்துரைகளை கொலிஜியம் மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.

7 பரிந்துரைகளை ஆய்வு செய்ய உள்ளது. 5 பரிந்துரைகளை அந்தந்த உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. கொலீஜியம் பரிந்துரைத்த மொத்தம் 142 பரிந்துரைகள்  பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. 138 பரிந்துரைகள் அரசில் பல்வேறு கட்ட செயலாக்கத்தில் உள்ளன.  தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தில் தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளின் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கு 7 பரிந்துரைகள் வந்துள்ளன.  ஜனவரி 30 ம் தேதி நிலவரப்படி  உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,108 நீதிபதிகளின் எண்ணிக்கைக்கு பதில் 775 நீதிபதிகள் பணிபுரிகின்றனர். 333 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: