வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரை துரத்துவதால் பீதி: சங்கரன்கோவிலில் அனைத்து நாய்களுக்கும் வெறி நோய் தடுப்பூசி: நகராட்சி நிர்வாகம் தகவல்

சங்கரன்கோவில்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவிலில் அனைத்து நாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி செலுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சங்கரன்கோவில் நகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இதனால் நாய்களின் தொல்லையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரை தெருநாய் துரத்துவதால் பொதுமக்கள் அச்சத்தில் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இது தொடர்பாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் பொதுமக்களிடம் புகார் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து ராஜா எம்எல்ஏ நகராட்சி நிர்வாகத்திடம் இவ்விவகாரத்தில் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில், நகராட்சி கமிஷனர் ஹரிஹரன், சுகாதார ஆய்வாளர் பாலச்சந்தர் உள்ளிட்ட குழுவினர் நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை ஊசி போடும் இடத்தை தேர்வு செய்யும் பணியை துவக்கியது. ஏற்கனவே ஊசி போட சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இடம் சிறியதாக உள்ளது. எனவே, கழுகுமலை சாலையிலிருந்து திருவேங்கடம் சாலை இணைப்பு சாலையில் உள்ள குப்பைகளை பிரித்து எடுக்கும் நிலையம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அங்கு தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து வந்து தடுப்பூசி, கருத்தடை ஊசி போடப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி கூறுகையில், ‘சங்கரன் கோவிலில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை ஊசிகள் செலுத்தப்படும் பணி 15 நாட்களுக்குள் தொடங்கப்படும். இப்பணிகளை செய்வதற்கு ஒப்பந்த புள்ளி தேர்வு செய்யப்பட்டு 2 மாதத்திற்குள் நகராட்சி பகுதியில் உள்ள நாய்கள் அனைத்திற்கும் வெறிநோய் ஊசி மற்றும் கருத்தடை ஊசிகள் செலுத்தப்படும்.

இதற்கு நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீடுகளில் நாய் வளர்ப்பவர்கள் வெறி நாய் ஊசி செலுத்தி அதற்கான சான்றிதழை தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள வேண்டும்.  நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்யும் பட்சத்தில் சான்றிதழ் இல்லாமல் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: