சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் 27,891 வாகனங்களில் தவறான வாகன எண் பலகைகள் சரி செய்யப்பட்டன

சென்னை: சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் 27,891 வாகனங்களில் தவறான வாகன எண் பலகைகள் சரி செய்யப்பட்டன என பெருநகர போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம், விதிகள் 50 மற்றும் 51-ன்படி வாகனங்களுக்கான பதிவு எண் தகடுகளின் அளவையும் வாகனப் பதிவுக் கடிதங்களையும் பரிந்துரை செய்கிறது. மேலும் இவ்விதிகளின்படி, வாகன எண் பலகைகளில் கலை அல்லது படங்களைப் பயன்படுத்துவதற்கு, எந்தவித ஆடம்பரமான எழுத்துக்களும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும், வாகன ஓட்டிகள் பலரும்  தங்கள் வாகனங்களில் தவறான வாகன எண் பலகைகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 31.01.2023 மற்றும் 01.02.2023 ஆகிய இரண்டு நாட்களில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் சிறப்பு வாகனத் தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சிறப்பு வாகனச் சோதனையின்படி, ஒவ்வொரு போக்குவரத்துக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூன்று இடங்களை தேர்வுசெய்து முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களை கண்டறிய தீவிர வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.

இச்சிறப்பு வாகனத் தணிக்கையில் 11,784 வாகனங்களில் சரியான பதிவு எண்கள் இல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, மேற் கூறிய வாகனங்களில் அதன் சரியான வாகன எண்களை பொருத்துவதற்கு அறிவுரை வழங்கி 11,784 வாகன எண்களுக்கு முறையான பதிவு எண்களை பொருத்தப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு அதன் தன்மையை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி எந்தவொரு வாகனங்களுக்கும் மோட்டார் வாகன வழக்கு பதிவு செய்யாமல் அறிவுறுத்தி எச்சரித்து அனுப்பப்பட்டன. கடந்த வாரம் 16,107 வாகனங்கள் இதேபோன்ற வாகனத் தணிக்கையில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகன எண் பலகைகளை சரி செய்தனர்.

இதனால் கடந்த இரண்டு வாரங்களில் 27,891 வாகனங்களில் தவறான வாகன எண் பலகைகள் சரி செய்யப்பட்டன. இதுபோன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தொடர்ந்து வாகன தணிக்கை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தங்கள் வாகனத்தின் பதிவு எண்கள் எவ்வாறு பொருத்தப்பட வேண்டுமென்று சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ள வரைவு நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories: