வேதநாதஈஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே மிகப் பழமையான அருள்மிகு ஸ்ரீ  வேதநாதஈஸ்வரர் திருக்கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மராஜம்பேட்டை அருகே வீரப்பராஜம்பேட்டையில் மிகப் பழமையான அருள்மிகு வேதநாயகி அம்பிகை சமேத வேதநாதஈஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருமணத் தடைகளை நீக்கும் மிகப் பழமையான கோயிலாக பக்தர்களிடையே போற்றப்படுகிறது. இதற்கிடையே, இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் கும்பாபிஷேகத்தின் முதல் கட்டமாக யாகசாலை பூஜைகள், மகா கணபதி ஹோமத்துடன் துவங்கின. 2வது நாளாக சோமகும்ப பூஜை, 3ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில், நேற்று காலை யாகசாலையிலிருந்து குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் புனித நீர்க் குடங்கள் அனைத்து கோபுரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, வேதநாதஈஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் மூவலர் உள்பட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, அலஙகார தீபாராதனைகள் நடைபெற்றன. நேற்று மாலை ஆலயத்தில் உள்ள கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவமும், இரவில் புஷ்பத்தேரில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. இக்கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வாலாஜபாத் உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கும்பாபிஷேக திருப்பணி குழுவினரும் வீரப்பராஜம்பேட்டை கிராம மக்களும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: