உத்திரமேரூர் அருகே உள்ள; ஸ்ரீ பெரியாண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மலையாங்குளம் கிராமத்தில் உள்ள பெரியாயி உடனுறை ஸ்ரீ பெரியாண்டவர் கோயிலில் புனரமைப்பு பணி சமீபத்தில் முடிவடைந்தது. இதையொட்டி நேற்று காலை கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக கடந்த 2 நாட்களாக கோயில் வளாகத்தில் வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.நேற்று காலை 3ம் கால யாகசாலை பூஜை முடிந்தபின்னர் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர், கோபுரம் கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் அங்கு குழுமியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் வட்டாட்சியர்கள் குணசேகரன், லோகநாதன், வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீ தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: