புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீட்டை காலி செய்ய கூறியதால்; பிஎஸ்என்எல் ஊழியர் மாரடைப்பால் சாவு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீட்டை  காலி செய்ய வருவாய்துறையினர் கூறியதால் பிஎஸ்என்எல் ஊழியர்  மாரடைப்பால்  இறந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் திடீர்நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (56). பிஎஸ்என்எல் ஊழியர்.  இவருக்கு சாந்தி என்ற மனைவி, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் 2 மகன்களுக்கும் தனித்தனியாக சுந்தரமூர்த்தி புதிய வீடுகள் கட்டியுள்ளார். வீடுகள் கட்டப்பட்ட இடம்  அரசு புறம்போக்கு நிலம் என கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று திடீர்நகர் பகுதிக்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள், இந்த பகுதியில்  18 வீடுகள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்குள் வீடுகளை காலி செய்துவிடவேண்டும். இல்லை  என்றால்  நாங்களே வீடுகளை இடித்துவிடுவோம் என கூறியுள்ளனர். இதுபோல் சுந்தரமூர்த்தியிடமும் வருவாய்த்துறையினர் கூறியுள்ளனர்.  இதனால் மனமுடைந்து காணப்பட்ட   சுந்தரமூர்த்தி, கடன் வாங்கி கட்டி  சிலமாதங்களே  ஆன வீடுகளை காலி செய்ய சொல்கிறார்களே என புலம்பி வந்துள்ளார்.  இந்நிலையில், இன்று அதிகாலை  திடீரென மாரடைப்பால் சுந்தரமூர்த்தி இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம்  அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: