மது குடிக்க பணம் கேட்டு தராததால், 25 ஆண்டு கால ‘லிவ்-இன்’ வாழ்க்கை ஆசிட் வீச்சில் முடிந்தது: 54 வயது பெண் பலி; 62 வயது காதலன் கைது

மும்பை: மது குடிக்க பணம் கேட்டு தராததால் தனது 25 ஆண்டு கால லிவ்-இன் பெண் மீது ஆசிட் வீசிய 62 வயது முதியவரை மும்பை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மகேஷ் பூஜாரி (62) என்பவரும், கீதா விர்கர் (54) என்பவரும் கடந்த 25 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல், ‘லிவ்-இன்’ ஜோடியாக வாழ்ந்து வந்தனர். இவர்களில் கீதா விர்கருக்கு திருமணமாகி முதல் கணவர் மூலம் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மது பழக்கத்திற்கு ஆளாகி இருந்த மகேஷ் பூஜாரி, தனது லிவ்-இன் ஜோடியான கீதா விர்கரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், கீதா விர்கரை சரமாரியாக தாக்கினார். இவ்வாறாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து சென்ற நிலையில், கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்த கீதா விர்கரின் மீது மகேஷ் பூஜாரி ஆசிட் வீசினார்.

அதனால் அலறி துடித்த கீதா விர்கரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கிருந்து தப்பிஓட முயன்ற மகேஷ் பூஜாரியை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தேசாய் கூறுகையில், ‘மருத்துவமனையில் 50% ஆசிட் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த கீதா விர்கர், சிகிச்சை பலனின்றி இறந்தார். ஏற்கனவே மகேஷ் பூஜாரி மீது கொலை முயற்சி வழக்குபதியப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றியுள்ளோம். தற்போது அவர் சிறையில் உள்ளார். ஏற்கனவே மாஜிஸ்திரேட்டிடம் இறந்த கீதா விர்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வழக்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: