நிதி பிரச்னை, தகாத உறவில் பிறக்கும் பச்சிளங் குழந்தை, ‘எஃப்’ - ‘எம்’ குறியீடு வார்த்தையை பயன்படுத்தி குழந்தை சப்ளை: பல்கலைக்கழக எழுத்தர் தம்பதி கைது

பாட்டியாலா: பஞ்சாப்பில் நிதி பிரச்னை, தகாத உறவில் பிறக்கும் குழந்தைகளை விற்று வந்த பல்கலைக்கழக எழுத்தர் தம்பதியை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியை சேர்ந்த தம்பதியர் சரண்பீர் சிங், பர்விந்தர் கவுர் ஆகியோர் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் எழுத்தர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கும், அதேபகுதியை சேர்ந்த சன்னி குமார் என்பவருக்கும் தொடர்பு உள்ளது. அதாவது புதியதாக பிறந்த குழந்தைகளை திருடி விற்பனை செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘பல்கலைக்கழகத்தில் எழுத்தர்களாக பணியாற்றும் தம்பதியினர், பல்கலைக்கழகத்திற்கு வருவோர், செல்வோர் மற்றும் தொலைபேசியில் பேசுவோரிடம் ெநருக்கமாக பழகுவர். அவர்களிடம் புதியதாக பிறந்த குழந்தை கைவசம் உள்ளதாக கூறுவர். இதற்காக ரகசிய வார்த்தை மற்றும் எழுத்துகளை பயன்படுத்துவர்.

யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, பெண் குழந்தைக்கு ‘எஃப்’ என்றும், ஆண் குழந்தைக்கு ‘எம்’ என்ற குறியீட்டு வார்த்தைகளையும் பயன்படுத்துவார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 3 முதல் ரூ. 5 லட்சம் வரை பேரம் பேசி விற்றுவருவர். இவர்களுக்கு பாட்டியாலாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளுடன் தொடர்பு உள்ளது. மருத்துவமனையில் குழந்தை பெறும் தாய்மார்களில் சிலருக்கு நிதி பிரச்னை இருக்கும்; இன்னும் சிலர் கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை பெற்றெடுப்பர். இதுபோன்ற தாய்மார்களிடம் குழந்தையை வாங்கி, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்து அந்த குழந்தைளை நல்ல விலைக்கு விற்று வந்துள்ளனர். அரசுப் பணியில் இருந்து பணி ஓய்வுபெற்ற சன்னி குமார் என்பவர் குழந்தை கடத்தல் தொழிலுக்கு புரோக்கராக செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் ஃபரித்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி மஞ்சிந்தர் சிங், பர்விந்தர் ஆகியோருக்கு மேற்கண்ட மூவரும் பிறந்து ஆறு நாள் ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற போது கையும் களவுமாக சிக்கினர். முக்கிய குற்றவாளி சன்னிகுமார் தலைமறைவாக உள்ளார்.

Related Stories: