காதல் விவகாரத்தில், வாலிபர் கடத்தி படுகொலை: 6 பேர் கைது

ஓசூர்: கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டம் கங்கிலிபுறா பகுதியை சேர்ந்தவர் கலிமுல்லா. இவரது மகன் சல்மான்கான் (23). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, உறவினரின் 17 வயது மகளை சல்மான்கான் காதலித்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதை அறிந்த சல்மான்கான் சிறுமி தன்னை காதலிக்கும்போது எடுத்த புகைப்படத்தை அனுப்பி திருமணத்தை நிறுத்தினார். மீண்டும் சிறுமிக்கு நடந்த திருமண ஏற்பாடுகளை நிறுத்த சல்மான்கான் முயற்சி செய்ததால், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் சல்மான்கானை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி சல்மான்கான் மாயமானார். இதுதொடர்பாக அவரது தாய் ஹாதாஜ் பானு, கடந்த 26ம் தேதி ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சல்மான்கானை தேடி வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் தாவரக்கெரே பகுதியில் உள்ள குட்டையில் சல்மான்கான் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த மாநில போலீசார் நடத்திய விசாரணையில் அவரை கொலை செய்து, உடலை குட்டையில் வீசிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இக்கொலை வழக்கு கடந்த மாதம் 27ம் தேதி ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், காதல் விவகாரத்தில் சல்மான்கான் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஓசூர் ராம்நகரைச் சேர்ந்த ஜான்பாஷா(36), சாதிக்(45), வாஜித்(25), முகமதுஅலி(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான ஜான்பாஷாவின் சித்தப்பா மகன்தான் கொலை செய்யப்பட்ட சல்மான்கான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்களும் உறவினர்கள்தான். மேலும், ஸ்ரீ காந்த்(36), கமலேசன்(28) ஆகியோர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: