5 கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு; சினிமா பாணியில் பிரபல ரவுடி உள்பட 4 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்

பெரம்பூர்: கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி உள்பட 4 பேரை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். சென்னை அயப்பாக்கம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (எ)கோண சதீஷ் (29). இவர்  மீது 5 கொலை வழக்குகள், இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்டவை உள்ளன. ஓட்டேரி, செம்பியம், கொடுங்கையூர், மாதவரம், திருவேற்காடு உள்ளிட்ட ஐந்து காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளது. மேலும் இவர் பிரபல ரவுடி அகரம் கதிர் என்பவரின் கூட்டாளியாவார். மேலும் சதீஷ் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இந்தநிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை பெரவள்ளூர் பகுதியில் சாலையில் சென்ற டேவிட், அவரது தந்தை அந்தோணி ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு நண்பர்களுடன் தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே பெரவள்ளூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து செல்வகுமார், பாலாஜி மற்றும் சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் தனிப்படையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னை அருகே அயப்பாக்கம் பகுதியில் ரவுடி சதீஷ் நண்பர்களுடன் தங்கியிருப்பதாக இன்ஸ்பெக்டர் பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி தனிப்படை போலீசார் நேற்றிரவு விரைந்து சென்று அயப்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி சதீஷ், அவரது நண்பர்கள் அணில் என்கின்ற சதீஷ் (26), மாது (24) மற்றும் தணிகாசலம் (20) ஆகிய 4 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களை பெரவள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: