நீலாங்கரையில் கார் மோதி டீக்கடைக்காரர் பலி: டிஎஸ்பி மகன் உள்பட 4 பேர் கைது

துரைப்பாக்கம்:  தஞ்சாவூர் மாவட்டம், அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதன் (30). இவர், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் கடந்த சில ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மதன் கடையை சாத்திவிட்டு, சாலையோரத்தில் சிறுநீர் கழித்து கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார், டீக்கடைக்காரர் மதன்மீது வேகமாக மோதியது. மேலும், அப்பகுதியில் திமுக பிரமுகரின் இல்ல நிகழ்ச்சிக்கு கட்சிக்கொடி கட்டிக்கொண்டிருந்த சங்கர் (50) என்பவர்மீது கார் மோதியது. இதில் மதன், சங்கர் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

 

இவ்விபத்தில் கார் மோதியதில் படுகாயம் அடைந்த டீக்கடைக்காரர் மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த சங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு எஸ்ஐ ஏழுமலை, தலைமை காவலர்கள் சீனிவாசன், சதீஷ்குமார், காவலர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு விபத்தில் இறந்த மதனின் சடலத்தை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய வேலூர் மாவட்ட டிஎஸ்பி தங்கவேலு மகன் அன்பரசு (25), அவருடன் இருந்த நரேஷ்வரன் (27), ஆனந்த் (27), ஹிட்லர் (23) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: