கந்தன்சாவடியில் முதியவரின் வங்கி கணக்கில் ரூ.45 லட்சம் அபேஸ்: உதவி மேலாளருக்கு போலீஸ் வலை

துரைப்பாக்கம்:  சென்னை கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ராஜீவ்காந்தி சாலையில் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள வங்கி கணக்கில் கடந்த 2021ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி ரூ.45 லட்சத்தை நிரந்தர வைப்பு நிதியில் டெபாசிட் செய்துள்ளார். அப்போது வங்கி பொறுப்பில் இருந்த உதவி மேலாளர் அப்சனா (45) என்பவர், முதியவருக்கு ரூ.45 லட்சம் டெபாசிட் செய்ததற்கான ரசீதை கொடுத்துள்ளார். பின்னர் தனது செல்போன் எண்ணையும் முதியவரிடம் அளித்துள்ளார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக முதியவர், அந்த வங்கி உதவி மேலாளரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. இதில் சந்தேகமான முதியவர், கடந்த மாதம் 24ம் தேதி வங்கிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அங்கிருந்த வங்கி மேலாளர் முரளி, கடந்த 2022ம் ஆண்டு, ஜனவரி மாதமே முன்னாள் உதவி மேலாளர் அப்சனா வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டதாக முதியவருக்கு தெரியவந்தது.

 

இதைத் தொடர்ந்து, தனது பெயரில் நிரந்தர வைப்பு நிதி கணக்கை முதியவர் ஆய்வு செய்தபோது, அதில் தனக்கு சொந்தமான ரூ.45 லட்சம் டெபாசிட் செய்யப்படவில்லை என்பதும், அப்பணத்தை முன்னாள் உதவி மேலாளர் அப்சனா அபேஸ் செய்து தலைமறைவானதும் தெரியவந்தது. மேலும், முதியவரின் ரூ.45 லட்சம் பணத்தை, முன்னாள் உதவி மேலாளர் தனக்கு சொந்தமான வங்கி கணக்கில் டெபாசிட் செய்திருப்பதும் தெரியவந்தது.  இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் வங்கி மேலாளர் முரளி மற்றும் முதியவர் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரின் வங்கி கணக்கில் ரூ.45 லட்சத்தை அபேஸ் செய்து தலைமறைவான முன்னாள் வங்கி உதவி மேலாளரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: