திருச்சி மணப்பாறையில் கொட்டும் மழையில் ஜல்லிக்கட்டு

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய திடலில், புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 700 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு குழுவிற்கு 25 பேர் வீதம் 350 வீரர்கள் களமிறங்கினர்.

காலை 8.30 மணிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஜல்லிக்கட்டு துவங்கியது. போட்டியை ஸ்ரீ ரங்கம் ஆர்டிஓ செல்வராஜ், நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள் வீரர்களை பந்தாடின. பல காளைகள் மின்னல் வேகத்தில் எல்லைக்கோட்டை கடந்து சென்றன.

ஜல்லிக்கட்டு துவங்கியதிலிருந்தே விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் வீரர்கள் காளைகளை போட்டி போட்டு அடக்கினர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சில்வர் அண்டா, சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

Related Stories: