ஓபிஎஸ் ஒரு மண்குதிரை.. அது கரை சேராது; பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்: ஜெயக்குமார் திட்டவட்டம்..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27ம் தேதி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதலால் இரு அணிகளாக பிரிந்து இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்ததி பேசிய அவர்; ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 பூத்கள் உள்ளன. போலியான வாக்குகள் செலுத்த முயற்சி நடக்கிறது. வாக்குகளை சரிபார்க்குமாறு வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும், அதிமுக முன் வைத்த காலை, பின் வைக்காது. எந்த நிலையிலும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது. ஓபிஎஸ் ஒரு மண்குதிரை. அது கரை சேராது. சிறிய தவறு காரணமாக, ஈரோடு கிழக்கு தேர்தல் பணிமனையில் 3 விதமான பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது. அதிமுக தலைமையிலான கூட்டணி தான் தமிழ்நாட்டில் உள்ளது; கூட்டணியில் பா.ஜ.கவும் உள்ளது. கூட்டணி இறுதியானவுடன் அனைத்து கட்சி தலைவர்களின் படமும், பணிமனையில் உள்ள பேனரில் இடம்பெறும்.

அதிமுக, பாஜக இடையேயான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பல்; 3 முறை கூட்டணி பெயர் மாற்றப்பட்டது குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார். பாஜகவின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: