ரூ60 கோடியில் 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்த 98 ஏக்கர் பரப்பளவில் தயாரான வேலூர் விமான நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

* 10.7 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்த காலதாமதம்

* பொதுமக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறுமா?

வேலூர்:  வேலூரில் 98 ஏக்கர் பரப்பளவில் ரூ60 கோடி செலவில் தயாராக உள்ள வேலூர் விமான நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளது. ஒன்றிய அரசு வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஒன்றிய அரசின் உதான்- பிராந்திய இணைப்பு திட்டம் மூலம் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 51 ஏக்கர் பரப்பளவில் விமான ஓடுதளம் இருந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு பிறகு சிறிது காலம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த வானூர்தித் தடம், 2006ம் ஆண்டு ஜூலை மாதம் ‘மதராசு பிளையிங் கிளப்பின்’ பயிற்சி விமானிகளுக்காக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்த 5 ஆண்டுகள் மதராசு பிளையிங் கிளப் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வானூர்தி தடம், 2011ம் ஆண்டில் பயன்பாடு ஏதும் இல்லாமல் மீண்டும் கைவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இந்தியா ஒன்றிய அரசின் உதான் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் அப்துல்லாபுரத்தில் இருக்கும் வானூர்தி தடத்தை 20 பயணிகள் வரை அமர்ந்து பயணம் செய்யக்கூடிய சிறிய வகை விமானங்களுக்கான, விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக, பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றது. அதாவது, ஆங்கிலேயர் காலத்தில் 700 மீட்டர் நீளமுள்ள ஓடு தளப்பாதை தற்பொழுது சிறிய பயணிகள் விமான சேவைக்காக, 850 மீட்டர் ஓடுதளப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விமான முனையம், தகவல் கட்டுப்பாட்டு மையம், ரேடார் கருவி அமைக்கும் இடம், சரக்கு முனையம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளிட்டவை அமைப்பதற்கான சிவில் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே விமான நிலைய டெர்மினல் கட்டிடம் மற்றும் விமான ஓடுதளப்பாதைக்கு இடையில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான மக்கள் உபயோகப்படுத்தக்கூடிய சாலை இருந்தது. இதில் 775 மீட்டர் சாலையை ஓடுதளத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 51 ஏக்கர் விமான ஓடுதளமாக இருந்த இடத்தை தற்பொழுது 47 ஏக்கர் வரை பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்தி 98 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விமானங்கள் டேக் ஆப், லேண்டிங் செய்வதற்கு 25 அடி உயரத்திற்கு மேல் உயரமுள்ள கட்டிடங்கள், மரங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இடையூறாக இருக்கும் என்பதால் மேலும் 10.72 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தருமாறு இந்திய வானுர்தி நிலையங்கள் ஆணைக்குழு கோரிக்கை வைத்தது.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இன்னும் தனியாருக்கு சொந்தமான 10.72 ஏக்கர் கட்டிடத்துடன் கூடிய நிலம் கையகப்படுத்தப்படவில்ைல. இதுதொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் இறுதிமுடிவு எட்டாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ளது.

எனவே விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்ற மக்களின் பல ஆண்டு கனவு எப்போது நிறைவேறும் என்று காத்து இருக்கின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் விமான போக்குவரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் விமான நிலையத்தில் ஏறக்குறைய 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவுபெற்று விட்டது. விமானங்கள் லேண்டிங் மற்றும் டேக் ஆப், செய்ய, பாதுகாப்பு காரணங்கள் கருதி அருகில் உள்ள 10.72 ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கும்பட்சத்தில் அனைத்து பேரா மீட்டர்களையும் பூர்த்தி செய்து வெகுவிரைவில் வேலூரில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விமானநிலைய பணிகள் முழுவதும் நிறைவு பெற்றபின் முதற்கட்டமாக வேலூரில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமானசேவை இயக்கப்படும். கடந்த 2020ம் ஆண்டு முதல் விமான சேவை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று உட்பட பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுவரை விமான போக்குவரத்துறை அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் 10.72 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு தொகையை ஒன்றிய அரசு தான் தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் ஒன்றிய அரசு, தமிழக அரசு தான் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இப்படி மாறி மாறி பணத்தை யார் தருவது என்று தெரியாமல் அதிகாரிகளும் மல்லுக்கட்டி வருகின்றனர். விமான நிலையத்திற்கு வாங்கப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்து பேசி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு காண முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ20 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

தற்போது விமான நிலையத்திற்கு கூடுதலாக மேலும் 10.72 ஏக்கர் இடம் தேவைப்படுகிறது. இந்த 10.72 ஏக்கர் நிலமானது 2 பேருக்கு சொந்தமானது. இதில் தேசிய ெநடுஞ்சாலையோரம் உள்ள நிலத்தின் உரிமையாளருக்கு ஹெக்டேருக்கு அதிகளவில் இழப்பீடு தொகை கிடைக்கிறது. எனவே அடுத்துள்ள நபரும் நிலத்திற்கு இழப்பீடு அதிகமாக கேட்டுள்ளார். இதையடுத்து, நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பீடு உயர்த்தி கேட்டு, மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து விமான போக்குவரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை உயர்அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ20 கோடி ஒதுக்கீடு தருவது என்று முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் இன்னும் ரூ20 கோடி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வேலூர் விமான நிலையத்தில் ரன்வே முடிவடையும் பகுதியில் உள்ள அரசு விடுதி, தனிநபர் இடத்தில் தான் ரன்வே என்டிங் சேப்ட்டி பாயிண்ட் வருகிறது. தற்போது, அந்த தனிநபர் இடம் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக விமான நிலைய பணிகள் முழுமை அடையவில்லை. அந்த இடத்தை ஒப்படைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு விடுதி மற்றும் தனிநபர் இடத்தை ஒப்படைத்த பிறகு கட்டிடத்தை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டு, 6 மாதத்திற்குள் மீதமுள்ள பணிகள் முடிவடைந்து, விமானங்கள் இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது. அதன் பிறகே வேலூரில் இருந்து எந்த வழிதடங்களுக்கு விமானங்கள் இயக்கலாம் என்று விமான நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும். அதற்கு விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: