தேர்தல் நடத்தை விதிமுறையால் தொடரும் சிக்கல்: ஈரோடு மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடுகளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு பிரத்யேக ரசீது வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 18ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக ரொக்கம் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் இல்லையென்றால் அவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டு சந்தைக்கு வரும் வியாபாரிகள் வெகுவாக குறைந்துள்ளனர்.  தொகுதி எல்லைகளில் சோதனை நடத்தப்படுவதால் பணம் கொண்டு வருவதில் சிரமம் இருப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். வியாபாரிகள் குறைந்த அளவில் மாட்டு சந்தைக்கு வருவதால் கடந்த 2 வாரங்களாக 30 சதவிகிதம் அளவிற்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என்று சந்தை நிர்வாகிகள் கூறியுள்ளனர். மாடுகளை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்பும் விவசாயிகளுக்கு மாட்டு சந்தையிலேயே பிரத்யேகமாக ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் சார்பின் வழங்கப்படும் இந்த ரசீதில், பணம் எடுத்து செல்பவரின் பெயர், முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன் ரசீது வழங்கப்படுவதால் இதை ஆவணமாக விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று சந்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் கண்காணிப்பதற்காக 4 நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: