ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் நெசவாளர்களுக்கு சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை: ஏமாற்றம் அளிப்பதாக ஜவுளிஉற்பத்தியாளர்கள் தகவல்

சேலம்: தமிழகத்தின் பிரதானமாக விளங்கும் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் சலுகை மற்றும் வளர்ச்சிக்கான அறிவிப்பு எதுவும் இல்லை. இது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், விருதுநகர், கரூர், காஞ்சிபுரம், திருபுவனம், கும்பகோணம் உள்பட பல பகுதிகளில் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். இப்பகுதிகளில் விசைத்தறியில் இருந்து அபூர்வா ஜரிகை சேலை, காட்டன் டவல், வேஷ்டி, சேலை, துண்டு, ஜமாக்காளம், ேபார்வை, ஏற்றுமதி ஜவுளிகளும், கைத்தறியில் இருந்து பட்டுச்சேலை, வேட்டி, துண்டு உள்பட பல ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஜவுளிகள் உற்பத்தியை பொறுத்தமட்டில் 2014ம் ஆண்டுக்கு முன்புவரை நல்லமுறையில் இருந்தது. அதன்பின்பு வந்த ஒன்றிய ஆட்சியாளர்கள் ஜவுளித்துறையை  பொருட்படுத்தாமல் விட்டனர். இதனால் நாளுக்கு நாள் ஜவுளி தொழில் நலிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு கேண்டி பஞ்சு ரூ54 ஆயிரத்துக்கு விற்றது. அது படிப்படியாக உயர்ந்து கடந்த மே மாதத்தில் ரூ1 லட்சத்து 5 ஆயிரம் வரை விலை ஏறியது. இது ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அளித்தது. நூல் நிலை அதிகரிப்பால் பல ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்தியை குறைந்தனர். பல ஜவுளி உற்பத்தியாளர்கள் காட்டன் நூலுக்கு பதிலாக ரயான் நூலில் ஜவுளி உற்பத்தியை தொடங்கினர்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து நமக்கு வரவேண்டிய ஆர்டர்கள் வரத்து சரிந்தது. இதனால் பல விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டது. விசைத்தறியாளர்கள் தங்களின் தறிகளை பழைய இரும்பு கடைக்கு கிலோ கணக்கில் எடைக்கு போட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஜவுளித்துறை சம்பந்தமாக பட்ஜெட்டில் சலுகையோ, வளர்ச்சிக்கான திட்டங்கள் வரும் என்று விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஜவுளித்துறை வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விசைத்தறி, கைத்தறிக்கு சலுகைகள், பஞ்சு விலை குறைப்பு, வெளிநாட்டு ஜவுளி ஆர்டர்கள் குறித்து இடம் பெறும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த பட்ஜெட்டிலும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததது ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெண்ணந்தூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறியதாவது: ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ5 லட்சத்திலிருந்து ரூ7 லட்சமாக உயர்த்தியுள்ளது. அஞ்சலகத்தில் முதியோர்கள் வைப்பு நிதி ரூ15 லட்சத்தில் இருந்து ரூ30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் அஞ்சலக சேமிப்பு நிதிக்கு வட்டி 7.5 சதவீதமாக புதியதாக உயர்த்தியுள்ளது போன்றவை பாராட்டும் விதமாக உள்ளது. ஆனால் நொடிந்து போன சிறு, குறு தொழில்களுக்கும் விசைத்தறி நெசவு தொழிலுக்கும் எந்தவித சலுகையும் வளர்ச்சிக்கான அறிவிப்பும் இல்லை. மேலும் வரலாறு காணாத அளவில் தங்கம் பவுன் ரூ43 ஆயிரத்திற்கு விற்கும் நிலையில், இப்போது தங்கத்துக்கு இறக்குமதி வரி விதித்துள்ளது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது. மொத்தத்தில் பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவ்வாறு சிங்காரம் கூறினார்.

விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம்

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசின் பட்ஜெட்,விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. 25லட்சம் கோடி என்றிருந்த விவசாய பயிர்க்கடனை 20 லட்சம் கோடி என்று சொல்லியிருப்பது ஏமாற்று வேலை. அதேபோல் 1,78,000 கோடி உரமானியம் வழங்குவதாக சொல்லியுள்ளனர். இந்த உரமானியம் என்பது கம்பெனிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் கம்பெனிகள், விவசாயிகளுக்கு உரத்தின் விலையை குறைத்து வழங்கினால் மட்டுமே பயன் கிடைக்கும். ஆனால் இதுவரை எந்த கம்பெனியும் உரத்தின் விலையை குறைத்து வழங்கியதில்லை.

மேலும் வேளாண்மைக்கு 1லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி மானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 28 மாநிலங்களுக்கும் இதை பிரித்தால் மிகவும் குறைவான தொகையே கிடைக்கும். இந்த வகையில் ஒட்டுமொத்தமாக இது விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது,’’ என்றார்.

Related Stories: