தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 10 நாட்களாக நெல் அறுவடை பணிகள் ‘படுஜோரு’

* ஆதாரவிலையாக ரூ.35க்கு கொள்முதல் செய்ய வேண்டும்

* தமிழக அரசிற்கு விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 10 நாட்களாக நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. காலம் தாழ்த்தாமல் நெல்லை கொள்முதல் செய்து, உரிய நேரத்திற்குள் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என தமிழக அரசிற்கு விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம்.

அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

30 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி

பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி உள்ளிட்ட நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதே போல் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை பாசனம் மூலம் தேவதானப்பட்டி, அட்டணம்பட்டி, மஞ்சளாறு அணை கிராமம், செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நெல் சாகுபடி நடைபெற்றுவருகிறது. பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மற்றும் தேவதானப்பட்டி மஞ்சளாறு ஆற்றுப்பாசனம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஐ.ஆர்.,64, என்எல்ஆர், எம்டியூ-1262, உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஐ.ஆர்.,64 மற்றும் என்எல்ஆர் ரகங்கள் 120 நாட்கள் ஆகும்.

எம்டியூ-1262 ரகம் 140 நாட்கள் ஆகும். நடப்பாண்டில் பருவமழை ஆரம்பத்தில் இருந்து நல்லமுறையில் பெய்து கண்மாய்கள் நிரம்பியது. இதனால் வழக்கத்தைவிட அதிகளவில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் சாகுபடி செய்ய மேல்மங்கலம் மற்றும் அழகர்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நெல் அறுவடை பணி தொடங்கியுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேல்மங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல்லை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதே போல் ஜெயமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் கெங்குவார்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் உள்ளது. இதில் தற்போது மேல்மங்கலம் கிராமத்தில் தான் முதலில் அறுவடை பணி தொடங்கியுள்ளது.இன்னும் 15 நாட்களுக்கு பிறகு ஒவ்வொரு பகுதியிலும் நெல் அறுவடை பணி தொடங்கிவிடும். தற்போது அரசு நிர்ணயம் செய்து நெல் ஈரப்பதத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.21 முதல் ரூ.22வரை அரசு கொள்முதல் செய்கிறது. நடப்பாண்டில் நெல் சாகுபடிக்கு அதிகளவு செலவு செய்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆகையால் ஒரு கிலோ நெல்லின் விலை குறைந்தபட்ச ஆதாரவிலையாக ரூ.35க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயிகளின் நலனில் தனிக்கவனம்

இதே போல் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லை காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் கொள்முதல் செய்த நெல்லிற்கு உண்டான பணத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனடியாக செலுத்த வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த காலங்களில் வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகரித்ததால் விவசாயிகளின் நெல்லை காரணம் காட்டி கொள்முதல் செய்ய அரசு அலுவலர்கள் தவிர்த்து வந்தனர். மேலும் அறுவடை செய்த நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்து, உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும். அவ்வவ்போது மழை பெய்யும் அரிகுறி இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்த சேதமடைய வாய்ப்புள்ளது.

தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு விவசாயிகளின் நலனில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. விவசாயிகளில் கோரிக்கைகளை கள ஆய்வு செய்து உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனால் தற்போது சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நிம்மதியாக உள்ளனர். தேவதானப்பட்டி பகுதியில் சாகுபடி செய்துள்ள சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெல்லை அறுவடை செய்து விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால் காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல் நெல்லை கொள்முதல் செய்து, உரிய நேரத்திற்குள் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

நெல் அறுவடை விவசாயிகளுக்கு வருவாய்த்துறையினர், சான்றுகள் உடனடியாக வழங்க வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட விவசாயிகள் தங்களது சாகுபடி சொந்த நிலம் மற்றும் குத்தகை நிலம் என உரிய சான்றிதழ்களை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: