புவனகிரி நகர கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

புவனகிரி: புவனகிரி நகரத்தில் நீண்ட காலமாக சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதனால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என கடைக்காரர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதற்குரிய தொகை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஏராளமான வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு முன்பு போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். இந்நிலையில் நேற்று அகற்றப்படாத ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.  நெடுஞ்சாலைகளை துறை அதிகாரிகள் புவனகிரி நகரின் கடைவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதையொட்டி புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: