முன்னேற்பாடு பணிகள் தீவிரம்; வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா: வரும் 5ம்தேதி நடக்கிறது

வடலூர்: வடலூரில் 152வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் அவதரித்த அருட்பிரகாச வள்ளலார் வடலூர், கருங்குழி ஆகிய ஊர்களில் வாழ்ந்து, மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்ற அருட்பிரகாச வள்ளலார் பசிப்பிணியை தீர்க்க, வடலூரில் சத்திய தருமசாலையையும், இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை காண சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனத்தை மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாத பூச நட்சத்திரத்தன்று ஞான சபையில் ஏழுதிரை நீக்கிய ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம்.

 அதே போல் இந்த ஆண்டு 152வது ஆண்டு தைப்பூச விழாவின் சிறப்பாகும். தைப்பூச விழா கடந்த(28ம்தேதி) சனிக்கிழமை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலோடு தொடங்கி இந்த நிகழ்ச்சி 30ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை திருவருட்பா முற்றோதல் நடைபெறுகிறது. பிப்ரவரி 4ம்தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்தன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், காலை 7.30 மணி அளவில் வடலூர் தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கு எரிவித்த கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து காலை 10 மணி அளவில் ஞான சபையில் பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது.

தருமச்சாலை மேடையில் மதியம் ஒரு மணி அளவில் திருஅருட்பா இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெறுகிறது. மறுநாள் தைப்பூச விழா அன்று (பிப்ரவரி 5ம்தேதி) ஞாயிறு காலை ஞானசபையில் காலை 6 மணி, 10 மணி, பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு ஜோதி ஆறு காலங்கள் ஏழு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. ஞாயிறுற்றுக்கிழமை காலை தருமச்சாலை மேடையில் தைப்பூச விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலா மற்றும் அறநிலைத்துறை முதன்மைச் செயலாளர், இந்து சமய ஆணையர், கூடுதல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இதையடுத்து  பிப்ரவரி 7ம் தேதி வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. திருஅறை தரிசனம் பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதன் தொடக்கமாக காலை ஆறு மணி அளவில் சபையிலிருந்து வளர பயன்படுத்தி பொருட்கள் அடங்கிய (பேழை) பெட்டியும், வள்ளலார் உருவப்படமும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மேளதாளம் முழங்க, வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே பார்வதிபுரம், நைனார்குப்பம், செங்கால் ஓடை, கருங்குழியில்வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோயில், தண்ணீரால் விளக்கு எற்றி வைத்த கருங்குழி இல்லம், வள்ளலார் வழிபட்ட பெருமாள் கோயில்  வழியாக ஊர்வலமாக எடுத்துக் கொண்டு மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள சித்தி வளாக திருமாளிகையை அடையும்.

 அதற்கு முன்பு மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் நீராடிய தீஞ்சு சுவை ஓடையில் உள்ள மண்டபத்தில் கருங்குழி ஜெம்புலிங்க படையாட்சி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதனை வரவேற்பார்கள். இதேபோன்று, பார்வதிபுரம், நைனார்குப்பம், கருங்குழி ஆகிய கிராமத்தினர்கள், வழி எங்கும் பூ, பழத்தட்டுடன் வரவேற்பார்கள். நிறைவாக மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஊர்மக்கள் திரண்டு வந்து இப்பல்லக்கை வரவேற்பார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார் மற்றும் பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் ஆகிய கிராம மக்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி பிராமாண்ட விழா கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் சத்திய ஞான சபையில் பக்தர்கள் தங்குவதற்கான மேற்கூரை அமைத்தல், சுத்தம் செய்தல்  உள்ளிட்ட அடிப்படை வசதி பணிகள் அறநிலையத்துறை மற்றும் வடலூர் நகராட்சி சார்பிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: